என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது
- கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி. கடந்த 22.1.23 அன்று கணவன் - மனைவி இருவரும் பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செம்மிபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், முத்துசாமி ஓட்டிய மோட்டார் சைக்கிளை, காலால் எட்டி உதைத்துள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிள் தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைப்பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சுந்தரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்த போலீசார் மதுரையைச் சேர்ந்த கபாலி என்பவனை கைது செய்து அவனிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொருவனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவன் கொடைக்கானல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, குற்றப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், அங்கு சென்று அவனை பிடித்து வந்தனர். போலீசாரது விசாரணையில் அவன் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அருண்குமார்(26) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.