search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
    • வினாடிக்கு 1,190 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை 1,710 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாயத்திற்கு சாத்தனூர் அணை பெரும் உதவியாக உள்ளது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 1,190 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து இன்று காலை 1,710 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக அளவு 12 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பைக் திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்டார்
    • நற்சான்றிதழ் வழங்கினார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், தலைமை காவலர்கள் ஐயப்பன், மணிகண்டன், முதல் நிலைக்காவலர்கள் மகேஸ்வரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளியை கைது செய்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மேற்கண்ட 4 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கிப்பாராட்டினார்.

    • புறம்போக்கு நிலத்தை அரசு வருவாய் துறை கணக்கில் கொண்டு வர வலியுறுத்தல்
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட நிர்வாக குழு முத்தையின், தங்கராஜ் முன்னிலை வகித்தார். செங்கம் வட்டத்தில் குப்பநத்தம் அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் 60 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதை அளவீடு செய்து தமிழ்நாடு அரசு வருவாய் துறை கணக்கில் முழுவதுமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏழுமலை, குப்புசாமி, மகாவிஷ்ணு, முருகன், பாலமுருகன், கோபி ஆகியோர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.

    • 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது
    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

    போளூர்:

    தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஒரு வாரமாக போளூர் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    அதேபோல் ஜவ்வாது மலையில் நேற்று பெய்த மழையில் போளூர் பெரிய ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய மஞ்சள் ஆற்றில் திடீரென்று வெள்ளம் ஜவ்வாதுமலை பட்டறைகாடு என்ற இடத்தில் உற்பத்தியாகி தானியார் அத்திமூர் வழியாக போளூர் பெரிய ஏரிக்கு வந்தடைகிறது.

    பட்டறைகாட்டில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் பெய்த மழையினால் 86 மி.மீ பதிவாகி உள்ளது.

    இதனால் போளூர் பெரிய ஏரிக்கு தொடர்ந்து மஞ்சள் ஆற்று வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க பணி நடந்தது
    • விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் அம்ருதா திட்டத்தின் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. தெருக்களில் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • என் வீட்டில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை
    • அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி

    திருவண்ணாமலை:

    வருமான வரி சோதனைக்கு எல்லாம் தி.மு.க. வோ, தி.மு.க. தலைவரோ, தி.மு.க. தொண்டர்களோ பயப்படுகிறவர்கள் அல்ல என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    கடந்த 5 நாட்களாக நடைபெற்ற வருமானவ ரித்துறை சோதனைக்கு பின்னர் நேற்று இரவு பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    1991-ம் ஆண்டு எனது தாய் சரஸ்வதி அம்மாள் பெயரில் கல்வி அறக்கட்டளையை நான் தொடங்கினேன். அதன் மூலம் பல கல்வி நிறுவ னங்களை உருவாக்கினோம்.

    திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பலர் இன்று பொறியாளர்களாக உள்ளார்கள் என்றால் அதற்கு இந்த கல்வி நிறுவனங்கள் உறுது ணையாக இருந்துள்ளது.

    6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு தொண்டு செய்துள்ளேன். பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறேன். 2006-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி என்னை உணவுத்துறை அமைச்ச ராக்கினார்.

    அன்றைய தினமே சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளையில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன்.

    எனது குடும்பத்தினர் அந்த அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். அந்த அறக்கட்டளைக்கு எனது முதல் மகன் எ.வ.குமரன் தலைவராக உள்ளார். எனக்கு சொந்தமான சொத்து என்றால் 48 ஏக்கர் 33 சென்ட் நிலம், திருவண்ணாமலை காந்தி நகரில் வீடு கட்டும் சங்கம் சார்பில் எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் (ஒரு மருத்துவமனைக்கு 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன்) சென்னையில் ஒரு வீடு இது தான் எனது சொத்து.

    இதை நான் தேர்தல் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும் குறிப்பிட்டுள்ளேன்.

    ஆண்டுதோறும் வருமான வரியை நான் முறையாக செலுத்தி வருகிறேன். வருமான வரித்துறையை ஏமாற்றுபவன் நான் அல்ல. 2006 முதல் 2011 வரையில் நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது அந்த துறையை சிறப்பாக செயல்படுத்தியதாக அப்போதைய முதல் -அமைச்சர் கருணாநிதி பாராட்டினார். அதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றமே இந்த துறையை பாராட்டியது.

    2013-ம் ஆண்டு என் மீது 11 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். திருவண்ணாமலை நீதிமன்றம் இது அரசியல் உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு என தீர்ப்பளித்தது.

    அதன் பிறகு உச்சநீதி மன்றம் வரை வழக்கு சென்றது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கு உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு என தள்ளுபடி செய்தது.

    தமிழ்நாட்டில் பாஜகவை சேர்ந்த தொழிலதிபர்களே இல்லையா, இந்த வருமான வரி சோதனைக்கு எல்லாம் தி.மு.க. வோ, தி.மு.க. தலைவரோ, தி.மு.க. தொண்டர்களோ பயப்படுகிறவர்கள் அல்ல. எனது அரசு பணியைத்தான் கடந்த 5 நாட்களாக உங்களால் முடக்க முடிந்தது.

    தி.மு.க.வின் மாணவர் அணி போல பாஜக அரசின் ஒரு அணியாக வருமான வரித்துறை செயல்படுகிறது என தமிழக விளையா ட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. வினரை வருமான வரித்துறையை வைத்து அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மிசாவையே பார்த்தவர். அவரால் அரவணைக்கப்பட்ட எங்களுக்கு ஒரே இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 வெற்றியை வென்றெடுப்பதுதான். இந்த சோதனை என்பது எங்களை முடக்குவதற்கான செயல். எனக்கும் சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காசா கிராண்டே மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும், அபிராமி ராமநாதனுக்கும் எனக்கும் என் துறைக்கும் 100 சதவிகிதம் எந்த சம்பந்தமும் இல்லை. உயர்ந்த மனிதர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இது போன்று தமிழ்நாட்டில் எதிர் கட்சிகள் தங்கள் கருத்தை சொல்ல முடியாத அளவுக்கு அரசியல் என்ற பெயரில் ரெய்டு நடந்ததா?

    4 தினங்களாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் கற்பனைக்கு எட்டாத செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். நான் நேர்மையானவனாக, மனசாட்சிக்கு பயந்தவனாக, தி.மு.க. தலைமைக்கு கட்டுப்பட்டவனாக என்றைக்கும் இருப்பேன். என் வீட்டிலோ, எனது மனைவி வீட்டிலோ, எனது பிள்ளைகள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசாவை வருமான வரித்துறையினர் எடுத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்று பதில் அளிக்கிறேன்.

    என்னுடன் பழகு பவர்கள், மனு அளித்தவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து அங்கு எடுத்த பணம் எனக்கு சொந்தமானது என்று கூறுவது முற்றிலும் தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்கள் எ.வ.குமரன், டாக்டர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, வசந்தம் கார்த்தி கேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், டிவிஎம் நேரு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின
    • மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    மழைக்கு முன்னதாக பலத்த காற்று வீசியதில் புழுதி கிளம்பி, பொதுமக்கள் கண்ணில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விடிய, விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி, மங்களாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் போது இடி தாக்கி வாழைமரங்கள் பாதியாக முறிந்து விழுந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் சாதன பொருட்கள் என வெடித்து சிதறியது.

    இதில் பல்பு, டி.வி. உள்ளிட்ட பொருட்கள் பழுதானது. ஒரு சில வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பானதால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

    அதேபோல் கண்ணமங்கலம் அடுத்த கானமலை ஊராட்சி, இருளம்பாறை அடுத்த முத்தாண்டி குடிசையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் கூரை வீட்டின் மீது இடி விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எறிந்து துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், நகை மற்றும் பணம் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது.

    • பைக் மீது மோதுவது போல சென்றதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கான்குலத்தான் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). குடிநீர் திட்ட மேற்பார்வையாளர். இவர் சம்பவத்தன்று இரவு கண்ணமங்கலம் காட்டுகாநல்லூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    பைக்கில் எதிரே வந்த காட்டுக்கா நல்லூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பார்த்திபன் ஓட்டி வந்து பைக் மீது மோதுவது போல சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், பார்த்திபனை ஆபாசமாக பேசி தனது கையில் வைத்திருந்த பேனா கத்தியால் அவரை குத்தியுள்ளார்.

    இதில் பார்த்திபன் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுத்தம் சுகாதாரம் குறித்து விளக்கம்
    • மாணவ மாணவிகள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று, விடலைப் பருவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது நடைபெற்றது.

    முகாமிற்கு தலைமை ஆசிரியர் அருளரசு தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை தன்னார்வலர் ரேமாண்ட், கலந்து கொண்டு " மாணவ மாணவிகளுக்கு விடலை பருவ உடல் மாற்றங்கள் ஆண் பெண் உடல் சார்ந்த பிரசனைகள் சுத்தம் சுகாதாரம் குறித்து விளக்கமளித்தார்.

    மேலும் மாணவ மாணவிகளுக்கு எடுத்து கொடுப்பான் கலந்துரையாடல் மூலம் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.

    • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
    • தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க உத்தரவு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பேசிய ஆட்சியர் அண்ணாமலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப் பாதையை 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தண்ணீர் வசதிகளுடன் கூடிய தூய்மையான கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றி பாதையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். பக்தர்கள் அன்னதானத்தை வீணாக்காமல் சாப்பிட வேண்டும்.

    தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் ஆகிய இடங்களில் நெரிசல் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்களை பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

    பக்த ர்களுக்கு தேவையான அளவு அனைத்து வழித்த டங்களிலும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் இடையூறுகள் இன்றி கிரிவலம் வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, மண்டல இணை ஆணையர் சுதர்சனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட அறிவுறுத்தல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகள் குவிக்கப்பட்டுள்ளன.

    திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், துணைப்பதிவாளர் ராஜசேகரன், மேலாண்மை இயக்குநர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தரமான பட்டாசு நிறுவனங்களிடம் இருந்து 65 லட்ச ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இதில் 450 ரூபாய் முதல் 1865 ரூபாய் வரையில் கிப்ட் பாக்ஸ்கள், சாக்லேட் கேண்டில், டிக்கேட், அனிமல் ஷோவர், டெம்பிள் ரன், டைனோசர், ஜிராபி, கிண்டர் ஜாய், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஆகிய சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை அன்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள காலை 6 மணி முதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.

    • அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.
    • மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை மற்றும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் விவசாய தேவைக்கான தண்ணீர் தேவைகளை சாத்தனூர் அணை பூர்த்தி செய்து வருகிறது.

    சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக வினாடிக்கு 3000 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில் தற்போது நீரின் அளவு 117 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 4 மாவட்டங்களின் அணையின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கவும் கூடாது என நீர்ப்பாசன துறை மற்றும் வருவாய் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து மேலும் கூடுதல் நீர் அணையில் இருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×