search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • காசாளர் அறையில் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின.

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் இருந்து வேட்டவலம் செல்லும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது.

    இந்த வங்கியில் நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் திடீரென புகை வெளியே வந்தது. இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் கீழ் பென்னாத்தூர் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ஆனால் வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது வங்கியின் காசாளர் அறையில் இருந்து தீ எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அதனை ஜன்னல் வழியாக அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதையடுத்து முன்பக்க கதவை தீயணைப்பு வீரர்கள் உடைத்து கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர். காசாளர் அறையில் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த தீ விபத்தில் காசாளர் அறையில் இருந்த கம்ப்யூட்டர், பணம் எண்ணும் எந்திரம் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து இதர ஆவணங்களை அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.

    உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின. மேலும் இந்த தீ விபத்து குறித்து கீழ் பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து காரணமாக இந்த வங்கிக்கு தற்காலிகமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவசர காலத்தில் சோமாசிபாடி கிளை வங்கியில் தற்காலிகமாக பணம் பரிவர்த்தனை செய்து கொள்ள அறிவிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நவராத்திரி 4-ம் நாள் ஏற்பாடு
    • அம்மன் திருவீதி உலா நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடக்கிறது.

    இதனை முன்னிட்டு கோவில் மண்டபத்தில உற்சவ அம்மன் கொலு வைத்து தினமும் பார்வதி அலங்காரமும், காமாட்சி, மாவடி சேவை, துர்காதேவி, ஸ்ரீஅன்னபூரணி, தனலட்சுமி, சரஸ்வதி, திருஅவதாரம் என பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.

    அதன்படி நவராத்திரி 4-வது நாளான நேற்று ரேணுகாம்பாளுக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாலை பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் நித்யா தீர்மானங்கள் வாசித்தார்.

    இக்கூட்டத்தில் துணை தலைவர் வி.குமார் உள்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசுகையில்:-

    கண்ணமங்கலம் சுடுகாடு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி-காட்டுக்காநல்லூர் சாலை சந்திப்பில் ரூ.4.35 லட்சம் மதிப்பில் மினி உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும், ரூ.7.26 லட்சம் மதிப்பில் டிராக்டர் வாங்குவது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி நன்றி கூறினார்.

    • நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னே ற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    23-ந் தேதி வியாழக்கி ழமை தேரோட்டம் நடைபெறும். 26-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அண்ணாமலையார் கோவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளியதும் 2668 உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப திருவிழாவிற்கு 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நகராட்சி சார்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்தல், கிரிவலப் பாதை மற்றும் திருவண்ணா மலை நகரில் சாலைகள் அமைத்தல், தூய்மை பணி செய்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிரிவலப்பாதையில் உள்ள ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணி செய்தல், கழிப்பறை வசதி செய்தல், கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணிகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், போக்கு வரத்தை சீர் செய்வது குறித்து ஆலோசிக்க ப்பட்டது. தீப தரிசனம் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் ெரயில்களை இயக்குவது, மலை மீது ஏறும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது, கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை முறைப்படு த்துதல், கோவில் மற்றும் கிரிவ லப்பாதையில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பட்ட பகலில் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன
    • பொதுமக்கள் குற்றச்சாட்டு

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட விண்ணமங்கலம், வாழைப்பந்தல், தச்சூர், மருசூர், அகிலாண்டபுரம், உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆற்றுபடுக்கையில் இரவு பகலாக டிராக்டர் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றன.

    இது சம்மந்தமாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தாலும் கண்டு கொள்ளாமல் உள்ளதால் பட்ட பகலில் மணல் கடத்தல் படுஜோராக நடைபெறுகின்றன.

    இதனால் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் போலீஸ், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால் சில தினங்களில் 7 டிராக்டர் 5 லாரி 3 பொக்லைன் எந்தி ரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து கல்பூண்டி செய்யாற்று படுக்கையில் பட்டப் பகலில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரி டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு பொது மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டன.

    ஆரணி தாசில்தார் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் நேரில் சென்று பொக்லைன், டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வருவாய் துறையினரை கண்ட பொக்லைன் டிராக்டர் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டிராக்டரை பையூர் வி.ஏ.ஓ கார்த்தி ஒட்டி வந்து ஆரணி தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திடிரென பூச்சி மருந்தை குடித்தார்
    • உதவி கலெக்டர் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு தாலுகா வெள்ளாமலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உத்திரமேரூர் அருகே உள்ள காரனையை சேர்ந்த சந்தியா(26) என்பவருடன் திருமணம் நடந்தது.

    இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலை யில் சந்தியா திடிரென பூச்சி மருந்தை குடித்தார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சந்தியாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் உதவி கலெக்டர் அனாமிகா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெல்லி திருடனை பொறி வைத்து பிடித்த போலீசார்
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் கார்த்திகேயன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 72).ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்.

    இவர் கடந்த மாதம் 27 ந்-தேதி ஆரணி ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி ஏமாற்றி மாற்று ஏ.டி.எம் கார்டை திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறி நூதன முறையில் முதியவரை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.22ஆயிரம் பணத்தை திருடி சென்றார்.

    இது சம்மந்தமாக வங்கியிலும் ஆரணி நகர போலீஸ் நிலையத்திலும் கோவிந்தராஜ் புகார் அளித்தார்.

    பின்னர் மீண்டும் தனது வங்கி கணக்கில் இருந்து புதிய ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுக்க முதியவர் சென்றார்.

    அதே வாலிபர் மீண்டும் வந்ததை கண்டு வங்கி வளாக பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முதியவர் புகார் அளித்தார். இதனையடுத்து முதியவரை மீண்டும் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுக்க போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    அப்போது முதியவரிடம் மீண்டும் அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்க உதவி செய்யவதாகககூறி ஏ.டி.எம். கார்டை பறிக்க முயன்றார். மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் டெல்லி, பிரேம் நகரை சேர்ந்த சஞ்சய்(32) என்பதும் முதியோர்களை குறி வைத்து ஏ.டி.எம்.,மில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

    பின்னர் அவரிடமிருந்து 7 ஆயிரம் ரொக்க பணம் 13 ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • குடியிருப்பு பகுதி சாலை ஆக்கிரமிப்பு
    • தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேன்ம லைபட்டி கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தனியார் நிலத்தின் மூலம் சென்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏரிக்கரை மேல் சாலையை அமைத்து அந்த பாதையை கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் சிலர் ஏரிக்கரை திடீரென பள்ளம் தோண்டி சாலையை ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வழியில்லாமல் செல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி 50-க்கும் மேற்பட்டோர் ஆரணி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டு தாசில்தார் மஞ்சுளா விடம் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்ட சாலையை மீட்டு தர கோரி புகார் மனு அளித்தனர்.

    புகார பெற்று கொண்ட தாசில்தார் மஞ்சுளா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • பெங்களூரை சேர்ந்தவர்
    • சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது பரிதாபம்

    செங்கம்:

    பெங்களூரை சேர்ந்தவர்கள் சாந்தி, ரமேஷ். இவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காரில் வந்தனர்.

    இவர்களுடன் உறவினர்களான தர்மபுரி யை சேர்ந்த துரைராஜ், கிருஷ்ணகிரியை சேர்ந்த பானுமதி என்பவர்கள் உடன் இருந்தனர். சாமி தரிசனம் முடிந்து நள்ளிரவு காரில் அனைவரும் பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    உடுமலைப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.

    செங்கம் உச்சிமலை குப்பம் அருகே வந்தபோது லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே சாந்தி ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    காரில் பயணம் செய்த சாந்தி, ரமேஷ், துரைராஜ், பானுமதி, லாரி டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாகச் சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாந்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு சாந்தி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைகள் வழங்கினர்
    • சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமிற்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    இதில் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சாந்தகுமார் உள்பட மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசோதனைகள், ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • தவறாக உள்ளதாக புகார்

    புதுப்பாளையம்:

    செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

    சாலை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்த நிலையில் ஆங்காங்கே சிறுபாலம் கட்டும் பணி மற்றும் கரியமங்கலம் அருகே டோல்கேட் அமைக்கும் பணி நடக்கிறது.

    செங்கம் முதல் திருவண்ணாமலை வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையில் பெயர் பலகைகள் அமைக்கப்படுகிறது. செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டப்பேட்டை கிராமத்திற்கு செல்லும் வழி பெயர் பலகை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    அண்டபேட்டை என்பதற்கு பதிலாக ஆண்டாப்பட்டு என்று வேறு ஒரு பகுதியில் உள்ள ஊரின் பெயரை மாற்றி பெயர் பலகை அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனால் புதிதாக அப்பகுதிக்கு வருபவர்கள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.

    எனவே ஆண்டாப்பட்டு என்று தவறாக அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அண்டபேட்டை என்று மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர்
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சையத் (வயது 23). பாத்திர வியாபாரி. இவரது நண்பர் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் சபீர் கான் (21). இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு சையதும், சபீர் காணும் போக்குவரத்தை வழிமறித்து பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.

    இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையத் மற்றும் சபீர்கானை கைது செய்தனர்.

    மேலும் போளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி 2 வாலிபர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    ×