search icon
என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • செங்கம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    செங்கம்:-

    செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜயராணிகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.

    இந்த கவுன்சில் கூட்டத்தில் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மண் ரோடுகள் உள்ள இடங்களில் சிமெண்டு சாலை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், தனஞ்செயன், பொறியாளர்கள் வினோத்குமார், வினோத்கன்னா, வெற்றி உள்பட பணி மேற்பார்வையாளர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:-

    வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55).கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (வயது52).

    கணவன், மனைவி இருவரும் பைக்கில் நேற்று வேலை சம்பந்தமாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் -வந்தவாசி சாலை லட்சுமிபுரம் அருகே வரும்போது பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
    • திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடந்தது

    வந்தவாசி:-

    வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 3 தின பவித்ரோத்சவம் தொடங்கியது. திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது.

    மேலும் அங்குரார்ப்பணம், முதற்கால யாக பூஜை, கந்த பவித்ரஸமர்பணம், பூர்ணாஹூதி நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு வாய்ந்த பூஜையை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
    • கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க உத்தரவு

    வேங்கிக்கால்:-

    திருவண்ணாமலை நகராட்சியில் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார்.

    திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 634 மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்ப ங்களில் உள்ள பழைய விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

    எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகராட்சி பொறியாளர் நீலேஷ்வர், உதவி பொறியாளர் ரவி, நகரமன்ற உறுப்பினர் கோபிசங்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளிலும் 5 ஆயிரத்து 634 மின்கம்பங்களில் உள்ள டியூப் லைட்டுகள் அகற்றப்பட்டு 9 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான புதிய எல்இடி பல்புகள் பொருத்தப்படும். மேலும் 801 இடங்களில் மின்கம்பங்கள் நடப்பட்டு எல்இடி பல்புகள் பொருத்தப்படும்.

    இந்த பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்னர் முடிக்கப்படும் என நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

    இந்த புதிய எல்இடி விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்ட பின்பு திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தெருக்கள் அனைத்தும் இரவிலும் பகல் போன்று காட்சி தரும் என தெரிவித்தனர்.

    • இளம்பெண்ணை சீட்டில் அமர சொன்னதால் வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:-

    ஆரணி அடுத்த களம்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). அரசு பஸ் கண்டக்டர்.

    இவர் சென்னையில் இருந்து பயணிகளை பஸ்சில் ஏற்றிக்கொண்டு போளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    மட்டபிறையூர் என்ற இடத்தில் பஸ் நின்றது. பஸ்சில் 2 இளம்பெண்கள் ஏறினர். அதில் ஒரு இளம்பெண் சீட்டில் அமர்ந்தார். இன்னொருவர் நின்று கொண்டு பயணம் செய்தார்.

    அப்போது கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சீட்டு காலியாக உள்ளதே அதில் அமர மாட்டீர்களா என்று கூறினார்.

    இதனால் இளம்பெண் அழுது கொண்டு தனது உறவினரான போளூர் டவுனை சேர்ந்த சீனிவாசன் (வயது 35) என்பவரிடம் தெரிவித்தார்.

    பஸ் போளூர் பஸ் நிலையத்தில் வந்து நின்றபோது கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் இளம் பெண்ணிடம் ஏன் இப்படி பேசினாய் என்று சீனிவாசன் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனிவாசன் மற்றும் அவரது நண்பரான எந்தல் பகுதி சேர்ந்த அருண்குமார் (31) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து கிருஷ்ணமூர்த்தி போளூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார், சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது
    • பக்தர்களுக்கு அழைப்பு

    வேங்கிக்கால்:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ந் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    நவராத்திரி 2-ம் நாள் விழாவில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3-ம் நாளில் கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4-ம் நாளில் மனோன்மணி அலங்காரத்திலும், 5-ம் நாளில் ரிஷப வாகன அலங்காரத்திலும், 6-ம் நாள் ஆண்டாள் அலங்காரத்திலும், 7-ம் நாள் சரஸ்வதி அலங்காரத்திலும், 8-ம் நாள் லிங்க பூஜை அலங்காரத்திலும், 9-ம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    அக்டோபர் 23 ஆம் தேதி திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை அன்று காலை பராசக்தி அம்மன் அபிஷேகமும், மாலையில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறும்.

    நவராத்திரி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று செல்லுமாறு அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டி.வி.எஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
    • ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்தி பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம் உதவித்தொ கையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு வழங்கி வருகிறார்.

    கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

    வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ளும் தாய்மார்கள் மகிழ்ச்சியான சூழலுக்கு சென்று ஆரோக்கி யமான குழந்தைகளை பெற்று எடுக்கிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 127 அங்கன்வாடி மையங்களில் 12 ஆயிரத்து 714 கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் செலவில் நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்க மாக தான் 550 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

    கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் நவீன பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செய்யாறில் அரசு சார்பில் நடந்தது
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு தலைவர்கள் திலகவதி ராஜ்குமார், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி வரவேற்றார்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ., எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். விழாவில் நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா பங்கேற்று கர்ப்பிணி களுக்கான ஊட்டச்சத்து, விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் தடுப்பூசி முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் நகராட்சி கவுன்சி லர்கள் கே.விஸ்வநாதன், ரமேஷ், கார்த்திகேயன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் என்.சங்கர், எம்.தினகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர், தில்லை.வீ.சந்துரு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
    • டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தில் குடிநீர் குழாய் வைத்து, மூடப்பட்டுள்ளது.

    தற்போது வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்காமல், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமலும் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் மிகவும் குறுகலாக உள்ள அனைத்து தெருக்களில் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.

    பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கோவர்த்தனன் கூறும்போது:-

    இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியை பார்வையிட டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதனால் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. அதன் பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.

    • கம்பத்தில் மாடுகளை கட்ட சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த அக்ராபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். கூலி தொழிலாளி. மனைவி இந்திரா (வயது 48). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் இவர்கள் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாடுகளை வீட்டின் அருகே இருந்த மின்கம்ப த்தில கட்டுவதற்காக இந்திரா சென்றார்.

    அப்போது அதில் இருந்த மின்சாரம் இந்திரா மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த இந்திராவின் கணவர் மற்றும் உறவினர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் இந்திராவின் அண்ணன் மாரிமுத்து புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்திரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாடுகளை மின் கம்பத்தில் கட்டுவதற்காக சென்ற போது பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நேற்று கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.ஊராட்சிமன்ற துணை தலைவர் சபரிகிரிசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி உட்பட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பது, ஊராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் நாடக மேடை அமைப்பது, நரசிங்க புரத்தில் பழுதடைந்த ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டுவது, பள்ளி வளாகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுற்றி சுற்றுசுவர் அமைப்பது, புளியந்தாங்கல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைப்பது, மண்டபகுளம் பகுதிக்கு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், மலைமேடு அண்ணா நகர் கிழக்கு பகுதியில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளவு, எம்ஜிஆர் நகரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டிகள் அமைப்பது முக்கிய இடங்களில் கேமரா வைக்க முடிவு மற்றும் மலைமேட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தடைமட்ட நீர் தொட்டி அமைப்பது, நரசிங்கபுரம் விரிவாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வது என்பது உள்பட 46 தீர்மானங்கள் குறித்தும் ஊராட்சி செயலாளர் ராஜேஸ்வரி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    பின்னர் தீர்மானங்கள் பொதுமக்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி பாண்டியன், பாப்பாத்தி ஜான்ஜெயபால், ஒன்றிய பணி மேற்பா ர்வையாளர் புஷ்பராணி , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரேசன் கடை விற்பனையாளர் சஸ்பெண்டு
    • அதிகாரி நடவடிக்கை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அடுத்த தென் கரும்பலூர் 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் அதே கிராமத்தில் கூட்டுறவு பொது விநியோகத் திட்டம் மூலம் ரேசன் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் விற்பனையாளராக செங்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 48) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு சரியான முறையில் போடவில்லை என்று மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் மணிவண்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    அதன் அடிப்படையில் வங்கி செயலாளர் அண்ணா மலை விசாரணை செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய 2,500 கிலோ அரிசி, 100 கிலோ பருப்பு ஆகியவை பொதுமக் களுக்கு வழங்காமல் அவர் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.

    அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அரிசி பருப்பு வழங்காமல் விற்பனை செய்த சுரேஷ் குமாரை கடந்த 30-ந் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    ×