என் மலர்
திருவண்ணாமலை
- கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
இதனால் அணையில் இருந்து சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பாறை உருண்டு விழுந்ததில் அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
- வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலையின் மலை அடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்துள்ளது.
இதில், அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
அந்த வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், மாவட்ட எஸ்பி சுதாகர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினா அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று இருப்பதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- திருவண்ணாமலையில் நேற்றில் இருந்து இன்று வரை 370 மி.மீ. மழை பெய்துள்ளது.
- பெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும்.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.
அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலினால் இதனையடுத்து தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "திருவண்ணாமலை நகரத்தில் ஃபெங்கல் மையம் கொண்டுள்ளது. அதனால் திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்றில் இருந்து இன்று வரை அம்மாவட்டத்தில் 370 மி.மீ. மழை பெய்துள்ளது.
இனி ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும். பின்னர் கர்நாடகாவுக்கு சென்று கன மழையை கொடுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
Fengal now right over Tiruvannamalai Town. Semma rains over Tiruvannamalai AWS now nearing 150 mm from 8.30 am. If you add yesterday rainfall till 8.30 am 222 mm, thats all 370 mm now in Tiruvnnamalai from yesterday. Next Dharmapuri, Tirupattur and Krishnagiri district is… pic.twitter.com/xk6M5mOitf
— Tamil Nadu Weatherman (@praddy06) December 1, 2024
- பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது.
- பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அச்சரப்பாக்கம் சாலையில் பூனை ஒன்று சுற்றி திரிந்தது.
அப்போது யாரோ ஒருவர் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதம் உள்ளதை சாலையில் வீசி சென்றுள்ளார். தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது. இதில் பூனையின் தலை சிக்கியது.
இதனால் பிளாஸ்டிக் கவருடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியது. பூனை சாலையில் ஓடியதால் விபத்தில் சிக்கும் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.
ஆனால் யாரிடமும் சிக்காமல் ஆட்டம் காட்டியது. இந்த நிலையில் சிறுவன் ஒருவன் சாலையில் ஓடிய பூனையை லாவகமாக பிடித்து தலையில் சிக்கிய பிளாஸ்டிக் கவரை அகற்றினான். பிளாஸ்டிக் கவரை எடுத்தவுடன் நிம்மதியுடன் மூச்சு விட்ட பூனை மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடியது. சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
- கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது.
- நெய் காணிக்கையையும் செலுத்தலாம்.
வேக்கிங்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் டிசம்பர் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
டிசம்பர் 13-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்றுவதற்கு 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள யானை வளாகம் முன்பு சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு உள்ளது.
இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ ரூ.150, கால் கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம்.
அதேபோல் வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் நெய் காணிக்கை செலுத்தலாம். பக்தர்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெய் காணிக்கை என்ற இணையத்தில் சென்று செலுத்தலாம்.
காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தீபத் திருவிழாவை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் முடிந்து 'மை' பிரசாதம் வழங்கப்படும்.
கவுண்டரில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைனில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு தபால் மூலமும் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
- இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
திருவண்ணாமலை:
மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவில், அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவன்ங் www.foscos.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுதவிர, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெறலாம்.
விண்ணப்பத்துடன் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் முகவரிக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடம் நாள், நேரத்தில் மட்டுமே அன்ன தானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.
வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ் சாலையில் நங்கிலிகொண்டான அருகே புதிய சுங்கச்சாவடி சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தபடி சுங்கச்சாவடி சுற்றி 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் என செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைமையில் அனைத்து சங்கங்கள் இன்று செஞ்சி நகரில் கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் என அறிவித்திருந்தனர்.
அதன்படி செஞ்சி நகரில் டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 10 மணி அளவில் செஞ்சியில் இருந்து வாகனங்களுடன் ஊர்வலமாக சென்று சுங்கச்சாவடி முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதனால் செஞ்சி நகரம் மற்றும் சுங்கச்சாவடி வரை செஞ்சி டி.எஸ்.பி. செந்தில்குமார் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் செங்கம் குப்புசாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முதல் மகன் சக்திவேல் கூலி வேலையும், இளைய மகன் மணிகண்டன் டிராக்டரும் ஓட்டி வந்தார். அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் சக்திவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மணிகண்டனிடம், சக்திவேல் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது தம்பி என்றும் பாராமல் மார்பு, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் மணிகண்டனை சரமாரியாக குத்தினார்.
இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேல் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஐப்பசி மாத பவுர்ணமி நேற்று காலை 5.40 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெற்றது.
- சுமார் 15 லட்சம் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வலம் வந்து வழிபட்டனர்.
வேங்கிக்கால்:
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கு பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்ததால் நகரமே திக்கு முக்காடியது. ஐப்பசி மாத பவுர்ணமி நேற்று காலை 5.40 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெற்றது.
14 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வலம் வருவதற்காகவும், அருணாசலேஸ்வரர் தரிசிக்கவும் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். வெயிலின் தாக்கம் இல்லாமல் அவ்வப்போது சாரல் மழையுடன் கூடிய இதமான சூழல் நிலவியது.
இதனால் நேற்று காலை முதலே பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் குடும்பம் குடும்பமாக அருணாசலேஸ்வரர் வலம் வந்தும், அருணாசலேஸ்வரரை கோவிலில் சாமி தரிசனம் செய்தும் சென்றனர்.
பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க இரவு கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வலம் வந்து வழிபட்டனர்.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய சுமார் 6 முதல் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
பக்தர்களின் தரிசன வரிசை கோவில் வளாகத்தை கடந்து பெரிய தெரு வரை நீண்டிருந்ததால் பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இனி வரும் பவுர்ணமி நாட்களிலாவது கோவில் வளாகத்தில் உள்ள காலி இடங்களில் மேற்கூரை அமைத்து சாமி தரிசனம் செய்வதற்கான தரிசன வரிசையை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
- மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
- அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.
இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.
இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.
- மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஆண்டு 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
கடந்த ஆண்டு தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்களுக்கு என மொத்தம் 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக தற்காலிகப் பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். நெரிசலைத் தவிர்க்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதைப்போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றப்படும்
தீபம் ஏற்ற தேவையான நெய், எண்ணெய் மற்றும் திரி ஆகியவற்றை இந்துசயம அறநிலையத்துறை சார்பில் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுக் கூட்டத்தில் பொதுப் பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
பரணி தீபத்தைக் காண வரும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்களுக்கு ஒரே மாதிரியான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 2-ம் பிரகாரத்தில் இருந்து பரணி தீபத்தைக் காண ஒரு வண்ணத்திலும், 3-ம் பிரகாரத்தில் இருந்து காண மற்றொரு வண்ணத்திலும் அனுமதிச் சீட்டுகளை அச்சடித்து வழங்க வேண்டும்.
தீபத் திருவிழாவைக் காண தவறான அனுமதிச் சீட்டுகளுடன் வரும் பக்தர்கள் மீது போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர்.
- தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது 2-வது மனைவி சரண்யா (29). திருவண்ணாமலையில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் சரண்யா வேலை செய்த போது. இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 31-ந் தேதி தீபாவளி அன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் திடீரென்று சரண்யா மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மகள் சரண்யாவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் பேச முடியாததால், அவரது தாயார் அரசுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த காவேரி திருவண்ணாமலைக்கு நேரில் வந்து விசாரித்தார்.
அப்போது சரண்யா சில நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் காவேரி உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். ஆனாலும், சரண்யா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசில் தனது மகளை காணவில்லை எனபுகார் அளித்தார்.
மேலும், தனது மருமகன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே காட்டுப் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் இளம்பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. திருவண்ணாமலை போலீசார் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.
அப்போது, அங்கு இறந்து கிடந்தது சரண்யா என்பது தெரியவந்தது. சரண்யாவின் தலை, மார்பு பகுதி மற்றும் ஒரு தொடை ஆகியவை மட்டுமே அங்கு கிடந்தன. அதை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்து வீசியது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் கோபியை கைது செய்தனர். கணவன் மனைவி இடையே சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் கோபி சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட தகராறில் சரண்யாவை கோபி கொலை செய்தார். சரண்யாவின் உடலை 8 துண்டகளாக வெட்டியுள்ளார்.
பின்னர் இது குறித்து அவருடைய தாயார் சிவகாமியிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து சரண்யாவின் உடல் பாகங்களை ஒரு டிராவல் பையில் வைத்து அடைத்தனர்.
பின்னர் இது குறித்து கோபி தன்னுடைய நண்பர் ராஜேந்திரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான காரை எடுத்து வந்தார்.
அவருடைய காரில் 3 பேரும் சரண்யாவின் உடல் பாகங்களை பையில் வைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதிக்கு சென்றனர்.
8 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்களை தனித்தனியாக காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர். தற்போது தலை மார்பு மற்றும் ஒரு தொடை மட்டுமே கிடைத்துள்ளன. மீதி உள்ள கை கால்கள் உள்ளிட்ட 5 பாகங்கள் கிடைக்கவில்லை.
அவற்றை கைப்பற்ற போலீசார் கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோபியின் தாயார் சிவகாமி மற்றும் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.