என் மலர்
திருவண்ணாமலை
- திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அதன்படி பவுர்ணமி வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வருவதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- பெண் ஒருவர் கதறி அழும் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
- ஒரு இளம்பெண் உருவம் 'வா' என சைகை காண்பித்து அவரை அழைத்துள்ளது.
ஆரணி:
ஆரணி பாளையம் டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35).
இவர், சொந்த வேலை காரணமாக தச்சூருக்கு சென்ற பின்னர், அங்கு வேலை முடிந்ததும், தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு வடுகசாத்து ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென கொலுசு சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் பைக்கை நிறுத்தி என்ஜினை அணைத்தார்.
இந்நிலையில், பெண் ஒருவர் கதறி அழும் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், மேலும் பதட்டமான பாலாஜி, என்ஜினை 'ஆன்' செய்து முகப்பு விளக்கை ஒளிரவிட்டார்.
அப்போது, 50 அடி தொலைவில் நின்றிருந்த ஒரு இளம்பெண் உருவம் 'வா' என சைகை காண்பித்து அவரை அழைத்துள்ளது.
இதனால் பயந்துபோன அவர், பைக்கை வேகமாக திருப்பி வந்த வழியே திரும்பினார்.
பின்னர், சில அடி துாரம் சென்றதும் மீண்டும் திரும்பி பார்த்தபோது, அந்த பெண் உருவம் வானில் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிகளை, பாலாஜி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, வாட்ஸ்ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
- மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூரில் டாஸ்மாக் உள்ளது.
இந்த கடையில் வாலிபர் ஒருவர் மது வாங்கியுள்ளார். இதனை திறக்க முயன்ற போது மதுபாட்டிலில் தூசி துகள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு சரிவர பதிலளிக்காமல் மது பாட்டில் சரக்கு நிறுவனத்திடம் கேட்க வேண்டும்.
என்னால் ஓன்றும் செய்யமுடியாது என்று கூறி மாற்றி பாட்டிலை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த வீடியோ மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது.
- நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடந்தது.
அதிகாலை நடை திறக்கப்பட்டு தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி மாடவீதி உலா நடைபெறும். 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, மேலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர்.
- வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவிகாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு டவுன் அவலூர் பேட்டை சாலையில் உள்ள குளம் அருகே திறந்த வெளியில் வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். விநாயகர் சிலையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விநாயகர் சிலையை ஏற்கனவே இருந்த இடத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் வைத்துச் சென்றனர்.
மேலும் விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பக்தர்கள் வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து விநாயகரை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
- 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தெள்ளுர் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகள் ஜெயந்தி. இவருக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயந்தியை பிரசவத்துக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி சேர்த்தனர். அங்கு ஜெயந்தியை டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் குழந்தை அசைவற்று இருப்பதாக கூறினர்.
ஆனால் வயிற்றில் அசைவு தெரிவதாக உறவினர்கள் கூறியதன்பேரில் டாக்டா்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஜெயந்திக்கு உடல்நலம் மோசமான நிலை ஏற்பட்டதால் அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு ஜெயந்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர். அங்கு 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். 13 மாதம் ஆகியும் கோமா நிலையிலேயே அவர் உள்ளதால் ஜெயந்தியின் உறவினர்கள், பெற்றோர்கள் சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆரணி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மருத்துவ குழுவினர் சம்பவத்தன்று இருந்த டாக்டர்கள், நர்சுகள் மயக்கவியல் டாக்டர் உள்ளிட்டவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பான அறிக்கை சென்னை சுகாதாரத்துறைக்கு தெரிவித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் கூறினார்.
இதுகுறித்துதகவல் அறிந்தவுடன் ஜெயந்தியின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
- கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.
ஆனி மாத பவுர்ணமி இன்று வெள்ளிக்கிழமை காலை 7.46 மணிக்கு தொடங்கி நாளை சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு நிறைவு பெறுகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.
கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் இன்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி விட்டன. அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்த பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி தனி வழி அமைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சாமி தரிசனம் செய்த அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.
- விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
- மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.
சிவனுக்குரிய எட்டு வகையான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. திரியோதசியும் சதுர்த்தசியும் இணையும் நாளை பிரதோஷம் என்கிறோம். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வீதம் வருடத்திற்கு மொத்தம் 24 பிரதோஷங்கள் வருகிறது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு உள்ள 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். தினமும் வருவதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர்.
அப்படி வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அவர்களுடைய கோவிலுக்குச் சென்று அவரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.
பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
இன்று ஆனி ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினம் என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது.
- சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலைக்கு உலக நாடுகளில் இருந்தும் ஆன்மீக அன்பர்கள் கிரிவலம் வருகின்றனர். அவர்கள் கிரிவலப்பாதையில் தங்கி இருந்து தியானம், யோகா செய்து வருகின்றனர்.
கூடவே அவர்களின் போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது. சாமியார்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் போதை திருவிழா நடத்த வெளிநாட்டினர் திட்டமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அயாஹுவாஸ்கா. ஆன்மிக ரீதியான பரவச நிலைக்கான திருவிழாவாக உலகம் முழுவதும் நடத்தபடு கிறது. அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் பழங்குடியின கலாசாரத்தோடு இணைந்தது இந்த அயாஹுவாஸ்கா திருவிழா.
அயாஹுவாஸ்கா என்ற ஒருவகை மூலிகைச் செடியில் இருந்து உருவாக்கப்படும் கசாயம் போன்ற பானம், மன நோய்களை குணப்படுத்து வதற்கும், ஆன்மிக ரீதியான பரவச நிலைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது போதை நிலைக்கு பயன்படுத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
மனதில் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் அயாஹுவாஸ்காவின் பயன்பாடு இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் கடந்த 15-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தனிப்படை அமைத்து சல்லடை போட்டுத் தேடினர்.
அதில் சந்தேகத்தின் பேரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பேசினர். அதிகாரிகளோ விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், அவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிகாரிகளுக்கே தலைச் சுற்றலை உண்டாக்கியது.
ரிஷிகேஷ், மணாலி என ஆன்மிகம், சுற்றுலாவில் சிறந்து விளங்கும் பகுதியில் அயாஹுவாஸ்கா திருவிழாவை நடத்தி விட்டு, அதன் வெற்றிக் கொண்டாட்டமாகத்தான் திருவண்ணாமலைக்கு அவர்கள் வந்துள்ளனர்.
20 வயதில் இருந்து 35 வயது வரையிலான ஆண்களும், பெண்களுமே இவர்களின் இலக்கு. அயாஹுவாஸ்கா கசாயத்தை குடித்தும், உடலில் சிறிய துளையிட்டு அதில் தவளை விஷத்தை செலுத்தியும் போதையை ஏற்படுத்துகின்றனர்.
போதை உச்சத்தை அடையும்போது, கட்டுப்பாடு அற்ற அத்துமீறல்களும், அடாவடிகளும் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சுமார் 6 மணி நேரத்திற்கு இது போன்ற மாயத்தோற்றம் இருக்குமாம்.
இதற்காக நபர் ஒருவருக்கு ஆயிரம் டாலர் வரை அதாவது இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரஷ்யர்களிடமிருந்து அயாஹுவாஸ்கா மட்டுமல்ல மேஜிக் மஸ்ரூம், கம்போ எனப்படும் தவளை விஷம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
239 கிராம் சைலோசிபின், டி.எம்.டி போன்ற மனநோய்களுக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
கிரிவலப்பாதையை அதிரவைத்த போதை திருவிழா தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருந்தனர், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை தேரடி வீதியிலுள்ள முருகர் தேர் பக்கத்தில் 'அமானுஷ்ய' உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.
காரின் முன்பக்க பகுதியில் 7 மனித மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
கயிலாய மலையில் சிவபெருமான் அமர்ந்திருப்பதைபோல பெரிய ஸ்டிக்கர் இருந்தன. சிவன் மடியில் அமர்ந்தவாறு, வாட்டசாட்டமான உடல்வாகுடைய அகோரி ஒருவர் கழுத்தில் மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து படுபயங்கரமாகக் காட்சியளித்த புகைப்பட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தன.
காரைச் சுற்றிலும் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடுகளுடன் ஆங்கிலத்தில் 'டேஞ்சர்' என்ற மண்டை ஓட்டு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருந்தன.
முன் பக்கமும், பின் பக்கமும் 'அகோரி நாக சாது' என ஆங்கிலத்தில் பெயர் பலகை தொங்கவிடப்பட்டிருந்தன. மிரட்சியை ஏற்படுத்திய அந்த காரை பொதுமக்கள் சூழ்ந்து பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். தகலவறிந்ததும், திருவண்ணாமலை போலீஸார் விரைந்து வந்து காரை நோட்டமிட்டனர்.
'அந்த நேரத்தில் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற அகோரி சாமியார் அங்கு வந்தார்.
சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, முகம் தொடங்கி உடல் முழுவதும் பூசிக்கொண்டிருந்தார். பெயர் 'அகோரி நாக சாது' எனக் கூறிய அவர், 'நானே கடவுள்.
நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு..' என பேசினார். அவரை கண்டித்த போலீசார் காரை இடையூறாக நிறுத்தியதற்காக ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்துவிட்டு அனுப்பி வைத்துவிட்டனர்.
திகில் கிளப்பிய இந்த காரால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தேரடி வீதியே பரபரப்புக்குள்ளாகி போனது. போதைத் திருவிழா மற்றும் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் திருவண்ணாமலையில் சில தினங்களாக பதட்டமும் படபடப்பும் எகிறி இருக்கிறது.
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் கைப்பற்றி போதை திருவிழாவை முறியடித்ததால் வெளிநாட்டு போதை கும்பல் வேறு வழியில் கிரிவலப் பாதையில் நுழைய கூடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி இது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் , வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
ஆந்திர மாநிலம், குண்டூர் பெண் குறையாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சசிதருர் (வயது 39). இவரது மனைவி கல்யாணி (33). இவர்களுக்கு பின்கா ராமச்சந்திரன் (11) என்ற மகனும், ஸ்ரீ ரித்திஷா என்ற மகளும் உள்ளனர்.
இவரது உறவினர்கள் பெங்களுருவை சேர்ந்த ரவி (24), ஈஸ்வரி (62).
இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை குண்டூரில் இருந்து இவர்கள் 6 பேரும் காரில் புறப்பட்டனர்.
காரை சசிதருர் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை அருகே வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுக்கியது.
காரில் பயணம் செய்த கல்யாணி, ரவி, சிறுமி ஸ்ரீ ரித்திஷா ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
மனைவி, மகள் தனது கண்முன்பே இறந்ததால் சசிதருர் கதறி அழுதார். இதனை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது. ஈஸ்வரி, பின்கா ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போளூர் போலீசார் கல்யாணி, ரவி, ஸ்ரீ ரித்திஷா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.