என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தக்காளி அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி
- தக்காளி விலை அதிகரிப்பானது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
- விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.
தென்காசி:
தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை வரலாறு காணாத அளவில் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் குடும்பப் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
தக்காளி விலை அதிகரிப்பானது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்த வண்ணமே இருந்தது. காரணம் உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.
பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
எனவே விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.