என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் உறைபனி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

- அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது உறை பனி சீசன் நிலவி வருகிறது. கொடைக்கானலில் மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 5 டிகிரி செல்சியஸ் மட்டுமே காணப்படுகிறது. மேலும் நகர் முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.
ஓங்கி உயர்ந்த மலை உச்சி கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர்.
இதனால் நகர் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏரியில் பனிமூட்டத்துக்கு நடுவே படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேக்கேஜ் டூரில் கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இங்கு சாரல் மழை, பனி மூட்டம், உறை பனி என காஷ்மீர் போன்ற சீதோஷ்ணம் காணப்படுவதால் அதனை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.
மேலும் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.