search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுனாமி 20-வது ஆண்டு நினைவுதினம்: சுனாமி ஸ்தூபிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் அஞ்சலி
    X

    சுனாமி 20-வது ஆண்டு நினைவுதினம்: சுனாமி ஸ்தூபிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் அஞ்சலி

    • 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
    • தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால் அந்த அலை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    ஆம். 2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக கடற்கரை வாழ் மக்களால் மறக்க இயலாது. அன்று ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.

    குமரி மாவட்டத்தில் சுனாமியில் சிக்கி கடலோர கிராமங்களான குளச்சல் , கொட்டில்பாடு, மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    பலர் காணாமல் போனார்கள். குளச்சல் பகுதியில் பலியான சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.


    இதேபோன்று மணக்குடி கிராமத்தில் 119 பேரும், கொட்டில்பாடு பகுதியில் 140-க்கும் மேற்பட்டோரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்ப்பட்டு உள்ளன.

    இந்த நினைவு ஸ்தூபியில் ஆண்டுதோறும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மேலும் அன்றைய தினம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது. மீனவ மக்களின் மனதில் நீங்காத வடுவாக உள்ள சுனாமி தாக்கி இன்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று காலை சுனாமி நினைவு ஸ்தூபிகளில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரி வேணி சங்கமம் கடற்கரை யில் அமைந்து உள்ள சுனாமி நினைவு சின்ன த்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு. குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் ஆகி யோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி னார்கள்.

    இதில் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணக்குடியில் இன்று காலை 7 மணிக்கு அங்குள்ள புனித அந்தி ரேயா ஆலயத்தில் நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய பங்கு தந்தை அஜன்சார்லஸ் தலைமை யில் நடந்த இந்த திருப்பலி யில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். 119 பேரை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு வந்ததும் அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் இன்று காலை 7 மணி அளவில் சுனாமி காலனியில் இருந்து மவுன ஊர்வலம் பங்குத் தந்தை ராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் 199 பேர் அடக்கம் செய்யப் பட்ட கல்லறைதோட்டத்தில் இறந்தவர்களின் நினை வாக மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பின்னர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் நினைவு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொட்டில்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், பூ மாலை அணிவித்தும். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட ஜவான்களும் கலந்து கொண்டனர்.

    கொட்டில் பாடு புனித அலெக்ஸ் ஆலய பங்குத்தந்தை, ராஜ் பிரார்த்தனை செய்தார். குளச்சலில் இன்று இரவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    Next Story
    ×