என் மலர்
உள்ளூர் செய்திகள்
பனிமூட்டம்: மலைப்பாதையில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்- தீப்பந்தங்களை கையில் ஏந்தி வீட்டிற்கு சென்ற மக்கள்
- குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மழையுடன் குளிரும் நிலவுகிறது. நேற்றும் குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழை எதிரொலியாக குன்னூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மினி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாதலங்கள் வெறிச்சோடியது.
கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் வரலாறு காணாத அளவில் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், வாகனங்கள் கூட தெரிவதில்லை. அந்தளவுக்கு மேகமூட்டம் உள்ளது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை கவனமாக இயக்க போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நிலவிய மேகமூட்டத்தால் குன்னூர் மலைப்பாதையில் கார், லாரி, இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதேபோல் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ராட்சத மரம் விழுந்ததில், டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி பொறியாளர் ஜான்சன் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடும் மேகமூட்டத்தால், குன்னூரில் இருந்து காட்டேரி கிராமத்திற்கு சென்ற பஸ், ஓட்டுனர் பிரேக் போட்டதால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.
மேலும் கொலக்கம்பையில் இருந்து மானார், சுல்தானா, பால்மரா, மூப்பர் காடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பழங்குடியின மக்கள் வாகனங்கள் எதுவும் வராததால், தங்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி கொண்டு வீடுகளுக்கு சென்றனர்.
இன்று அதிகாலை மலைப்பாதையில் கடும் மேகமூட்டம்நிலவியது. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடந்த 3 நாட்களாக மழையுடன் கடும் குளிரும் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.