search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு திருத்தலத்தின் 45-வது ஆண்டு விழா
    X

    வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு திருத்தலத்தின் 45-வது ஆண்டு விழா

    • வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு திருத்தலத்தின் 45வது ஆண்டு விழா இன்று தொடங்கியது.
    • 45-வது ஆண்டு விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சென்னை:

    இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு. இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனித் திருத்தலம் உள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால் அனைத்து மதத்தினரும் இத்திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 45-வது ஆண்டு விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை நவநாள் திருப்பலி நடந்தது. மாலை ஜெப மாலை திருப்பலி நடக்கிறது. செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் போஸ்கோ தலைமையில் இந்த கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    2-ம் நாளான நாளை நற்கருணை பெருவிழா நடக்கிறது. காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, நவநாள், நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. மானாம்பதி கண்டிகையில் உள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை விக்டர் வினோத், ஆர்.என்.கண்டிகையில் உள்ள தூய அமல அன்னை ஆலய பங்குத்தந்தை ரவி ஜோசப், பல்லாவரம் புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தின் உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் கிளாட்வின் ஆகியோர் தலைமை தங்குகிறார்கள்.

    சிகர நிகழ்ச்சியான திருத்தேர் பெருவிழா 29-ம் தேதி நடக்கிறது. காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெறுகிறது.

    செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இறுதி நாளான 30-ம் தேதி திருத்தூதர் பெருவிழா மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுகிறது. செயிண்ட் தாமஸ் அகாடமி இயக்குனர் தந்தை சி.பால்ராஜ் ஆங்கிலத்தில் திருப்பலியை முன்னெடுக்கிறார். மாலை ஜெபமாலை, நவநாள், திருவிழா திருப்பலி அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. செங்கல்பட்டு மறை மாவட்டத்தைச் சேர்ந்த மேய்ப்பு பணி மைய இயக்குனர் அருட்பணி இயேசு அந்தோணி தலைமை தாங்குகிறார்.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் அதிபர் தந்தை ஏ.மார்ட்டின் ஜோசப் மற்றும் உதவி பங்கு தந்தை ஜான் ராபர்ட் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×