என் மலர்
உள்ளூர் செய்திகள்
டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் மூர்த்தி
- இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது.
- 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூா் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. மேலூர் நரசிங்கம் பட்டியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களிலும், நடைபயணமாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வெள்ளமென திரண்டு பொதுமக்கள், விவசாயிகள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
இந்தநிலையில் இன்று காலை அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற அமைச்சர் மூர்த்தி பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசின் நிலைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
இருந்தாலும் மக்களுக்கு அச்சத்தைப் போக்குகின்ற வகையிலே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிராம மக்களிடம் எடுத்து கூறி இருக்கின்றோம். நமது திராவிட மாடல் ஆட்சி ஒரு போதும் மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் வருவதற்கு அனுமதிக்காது.
இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமன்றத்திலே நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.
தமிழக முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் மக்களின் அச்சத்தை போக்குகின்ற வகையிலே தமிழக முதல்வரின் கருத்தை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.
நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராமல் இருக்க அத்தனை நடவடிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.
யார், யார் எதையெல்லாம் வந்து இங்கு சொன்னாலும் இந்த பகுதி மக்களை பாது காக்கின்ற பொறுப்பு எங்கள் கடமை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். டங்ஸ்டன் பேரணி தொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதையடுத்து அமைச்சர் பி.மூர்த்தி, மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அ.வல்லாளப்பட்டி, கிடா ரிப்பட்டி, தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய பகு திகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து டங்ஸ்டன் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாடுகளை எடுத்து ரைத்தார்.
இந்த பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.