என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரவலாக மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

- வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.
- பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பகலில் வெயில் அடித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டன. மதியம் 1 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையாகவும், திடீரென சாரல் மழையாகவும் பெய்தது. வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.
மாநகரில் டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பெருமாள்புரம், பாளை, புதிய பஸ் நிலையம், மார்க்கெட், கே.டி.சி. நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையில் ஷேர் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. பாளையில் 12 மில்லிமீட்டரும், நெல்லையில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே பழைமையான கட்டிடத்தின் சுவர் ஒரு பகுதி இடித்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
மாவட்டத்திலும் நாங்குநேரி, அம்பை, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி 27.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரியில் 13 மில்லிமீட்டரும், அம்பையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 5 மில்லிமீட்டரும், கன்னடியனில் 10 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. வீரவநல்லூர் பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த பரவலான மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 270 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 14 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி, கருப்பாநதி அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. ராமநதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சிறிது நேரம் கனமழை பெய்தது. கோவில்பட்டியில்யில் பெய்த மழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 11.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரங்குடி, கீழ அரசடியில் விட்டு விட்டு லேசான சாரல் அடித்தது.