search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் உலக தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படுமா?-சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    ஒகேனக்கல் உலக தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படுமா?-சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

    • உலக தரத்திற்கான அனைத்து இயற்கை அழகும் இருந்தும், முழுவதுமாக ரசிக்க முடியவில்லை.
    • வசதி வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறது என்று சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    பாப்பிரெட்டி ப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளம் உலக தரத்திற்கான அனைத்து இயற்கை அழகும் இருந்தும், முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. கூடுதல் வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஒகேனக்கல் சுற்றுலாத்தலம், தென்னிந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது.

    இந்த சுற்றுலா இடத்தை காண்பதற்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலம், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பேர் தினமும் வந்து ரசித்து செல்கின்றனர்.

    இந்த ஒகேனக்கல் சுற்றுலா தலம் 2000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது.

    பெருந்தொழிற்சாலையை போல மாசுக்கட்டுப்பாடு இல்லாமல் இந்த தொழிலாளர்கள் இயற்கையை சார்ந்த வேலையை செய்து வருகின்றனர்.

    மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல், நாவிற்கு சுவையான சுட சுட மீன் சமையல் சமையல் செய்து கொடுத்தல், சுகமான சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை தரும் விசேஷ மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட பல தலைமுறை கண்ட எண்ணெய் மசாஜ் என இயற்கை சார்ந்த தொழிலை செய்து வருகின்றனர்.

    பூமியின் சொர்க்கம் சுற்றுலா தளம், மக்களுக்கு பெரிய மகிழ்ச்சியை பல விதத்தில் கொடுக்கக் கூடியது, அமைதியை, இயற்கையை நேசிப்ப வர்கள் விரும்புகிற வர்களுக்கு அற்புதமான இடமாக இருக்கிறது.

    ஒகேனக்கல்லில் ஒரு நதி எவ்வளவு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ? அவ்வளவு அழகையும் கொட்டி வைத்துள்ளது. எங்கும் காண முடியாத புகைப்பாறைகள், அமைதியான ஓடையாக, சிறு நதியாக, ஓங்கிய மலைகளுக்கு நடுவில், உயர்ந்த மரங்களுக்கு இடையில், உயர்ந்த பாறைகளுக்கு இடுக்கில், கொட்டி வைத்த மணல் குவியல் மீது, விளையாடும் கால்வாயாக, இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் மலைகளுக்கு நடுவில், பல லட்சம் தாவரங்களின் பாதுகாப்பில் இந்த காவிரி ஆற்றை நாம் ரசிக்கலாம் வேறு எந்த இடத்திலும் காணமுடியாது.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சுற்றுலாத்தலம், இன்னமும் சுற்றுலா பயணிகள் முழு அழகையும் ரசிக்க கூடிய வகையில் வசதி வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறது என்று சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கையில்

    ஒகேனக்கல்லில் நாம் சுற்றிப் பார்ப்பதற்கு பரிசல் ஏற்பாடுகள் இருக்கிறது. அவைகளில் குறிப்பிட்ட அளவு மட்டுமே செல்லக்கூடிய நிலை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லை முழுவதுமாக ரசிப்பதற்கான வசதிகள் இல்லை. உயரமான கோபுரங்கள் இல்லை. தொங்கு பாலம் பாதுகாப்பு காரணம் காட்டி பயன்பாட்டில் இல்லை. பாலம் இருந்தாலும் சில மீட்டர் தூரமே செல்ல முடியும். அடிக்கடி வெள்ள பெருக்கால் பாலம் மூடப்படுகிறது. எனவே மிக உயரமாக பாதுகாப்பு மிகுந்ததாக பாலம் அமைத்தால் முழு அழகையும் ரசிக்க முடியும்.

    அதேபோல அருவி பகுதிகளை முழுவதுமாக காண்பதற்கு மறுப்பகுதியில் உள்ள கர்நாடக மாநில எல்லைக்குச் சென்று அங்கிருந்து நாம் பார்க்கும் சூழல் நிலவுகிறது. எனவே ரோப் கார் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    அப்போது முழு அழகையும் சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும். இயற்கை அழகு நிறைந்த மரம் செடி கொடிகளை பார்க்க முடியவில்லை. பூமியில் மிகவும் பழமையான தெற்காசியாவில் மிகப் பழமையான கார்பனாடைட் பாறைகள் இந்த பகுதியில் மிகவும் அழகாக உள்ளது.

    அருவியில் 10 பேர் மட்டுமே குளிக்கும் நிலையிலேயே உள்ளது. கூடுதல் இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் மதம் சார்ந்த நம்பிக்கையில் இறந்தோருக்கு திதி கொடுப்பதற்கு கடவுளை வழிபடுவதற்கும் பல்லாயிரம் பொதுமக்கள் இந்த காவிரி ஆற்றுக்கு வந்து செல்கின்றனர்.

    அவர்கள் பாதுகாப்பாக சமையல் செய்து குளித்து செல்வதற்கு, பெண்கள் உடை மாற்றுவதற்கு போதிய இட வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும், சுவையானதாகவும், ஆரோக்கியம் மிகுந்த மீன்உணவு வகைகளை கொடுப்பதற்கு அங்குள்ள மீன் சமையல் செய்பவர்களுக்கு நன்றாக இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இந்த பகுதி அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வனவிலங்குகளையும் கொண்ட உயிரியல் பூங்காக்களையும், பறவைகள் சரணாலத்தையும் இப்பகுதியில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை கவருவதோடு, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×