என் மலர்
உள்ளூர் செய்திகள்
தரமில்லாத குளிர்பானங்கள்-பழச்சாறு விற்பனை தடுக்கப்படுமா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
- கடைகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட, காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்கின்றனர்.
- குளிர்பானங்கள் விற்பனை குறித்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு நடத்துவது அவசியமாகும்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முன்னதாகவே கோடை வெயில் துவங்கி கொளுத்தி வருகிறது. இந்த சீசனில் குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு விற்பனை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும்.இதை பயன்படுத்தி சில கடைகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட, காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்கின்றனர்.
குளிர்பான பாட்டில்களில் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விபரங்களை சரிபார்ப்பது குறித்த விழிப்புணர்வு போதிய அளவு மக்களுக்கு இல்லை. குளிர்பானங்களை தவிர்க்கும் மக்கள் பழச்சாறு அருந்த ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால் அதிலும் சில இடங்களில் அழுகிய பழங்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.இவ்வாறு கோடை வெயிலை தணிக்க குளிர்பானம், பழச்சாறு அருந்தும் மக்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை தொடர்கதையாக உள்ளது.
இதே போல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில், முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்கின்றனர்.உணவு பாதுகாப்பு துறை சார்பில், இந்த சீசனில் தரமான பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை குறித்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வு நடத்துவது அவசியமாகும்.
இதனால் விற்பனையாளர்களுக்கும், நுகர்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும். அதே போல் சீசனையொட்டி, புற்றீசல் போல பெருகும் தண்ணீர் பாட்டில் விற்பனை குறித்தும் நகர, கிராமப்புறங்களில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.