என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் கனமழை- மின் தடை
- மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழை காரணமாக ஏற்காட்டில் கடும் குளிரும் நிலவியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் இந்த மழை கனமழையாக கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் ஏற்காட்டில் பெய்த திடீர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் நேற்றிரவு முதல் தண்ணீர் கொட்டுகிறது. இதில் ஏற்காடு செல்லும் பயணிகள் அந்த அருவிகளில் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இன்று காலையும் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான சூழலை ஆனந்தமாக அனுபவித்து ரசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் தூங்க முடியாமல் விடிய, விடிய கொசுக்கடியால் தவித்தனர். தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் இன்று காலை குளிர்ந்த காற்றும், கடும் குளிரும் நிலவியது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, நத்தக்கரை, ஓமலூர், எடப்பாடி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 76.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 5, கரியகோவில் 4, வீரகனூர் 5, நத்தக்கரை 19, சங்ககிரி 2.4, எடப்பாடி 2.6, மேட்டூர் 2.4, ஓமலூர் 5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 143.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.