search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகரைப் போல் 24 பாராளுமன்ற தொகுதிகளில் பண மழை பொழியும்
    X

    ஆர்.கே.நகரைப் போல் 24 பாராளுமன்ற தொகுதிகளில் பண மழை பொழியும்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெய்த பண மழையை விட தற்போது பாராளுமன்ற தேர்தலில் பல மடங்கு பண மழை பெய்து வருவதை மத்திய, மாநில உளவு துறைகள் கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள்ளன. #LokSabhaElections2019 #EC
    சென்னை:

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர்களைக் கவர மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடந்தது.

    20 ரூபாய் நோட்டுக்களை டோக்கனாகக் கொடுத்தும் பல இடங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு மாறியதாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெய்த பண மழையை விட தற்போது பாராளுமன்ற தேர்தலில் பல மடங்கு பண மழை பெய்து வருவதை மத்திய, மாநில உளவு துறைகள் கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள்ளன. பணமழை தொடர்பாக உளவுத்துறையினர் கொடுத்துள்ள தகவல்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மிகக் கடுமையான அதிர்ச்சியை அளித்துள்ளது.


    இந்தியாவிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில்தான் அதிக பணப்பட்டுவாடா நடக்கும் என்று ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 40 தொகுதிகளிலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிக பறக்கும் படைகள், அதிக கண்காணிப்பாளர்கள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    என்றாலும் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை மீறி பணம் தண்ணீராக செலவு செய்யப்படுவதாக உளவுத்துறை கூறியுள்ளது. 40 தொகுதிகளில் குறிப்பிட்ட 24 தொகுதிகளில் மிக அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

    இதில் சில தொகுதிகளில் சில வேட்பாளர்கள் ரூ.100 கோடி வரை செலவு செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுகிறார்கள்.

    எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வெறியில் அவர்கள் பணத்தை செலவு செய்வதாக கூறப்படுகிறது.

    பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் ரூ.50 கோடி வரை செலவு செய்துள்ளனர். தண்ணீராக வாரி இறைக்கப்பட்டு வரும் இந்த கோடிக்கணக்கான பணத்தில் பெரும்பாலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    அடுத்தப்படியாக பொதுக் கூட்டங்களுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளுக்கும் பணம் தாராளமாக வழங்கப்படுகிறது.

    மொத்தத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த தடவை தேர்தலில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வேட்பாளர்கள் செலவு செய்வதாக உளவுத்துறை மூலம் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் கணித்துள்ளனர். #LokSabhaElections2019 #ElectionCommission
    Next Story
    ×