என் மலர்
இந்தியா
ஆந்திராவில் ஒரே இரவில் அட்டகாசம்- 2 காவலாளிகளை அடித்து கொன்று 10 கடைகளில் கொள்ளை
- கொலை செய்யப்பட்ட 2 காவலாளிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், அமராவதி சாலையில் உள்ள அருண்டல்பேட்டை, டோன்சர் சாலை, பதக்குண்டூர், பழைய ஆந்திரா பேங்க் சாலை, சுத்த பள்ளி, டோங்கா பகுதியில் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்தனர்.
அமராவதி சாலையில் உள்ள பைக் ஷோரூமில் கிருபாநிதி என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காவலாளியாக வேலை செய்து வந்தார். அங்கு வந்த கொள்ளை கும்பல் காவலாளியை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.
பின்னர் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த லாக்கர்களை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதையடுத்து அருண்டல்பேட்டையில் உள்ள மதுபான கடைக்கு சென்று அங்கு இருந்த காவலாளி சாம்பசிவம் என்பவரை அடித்தே கொன்றனர்.
கடைக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்தனர் அதே பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்று கடையின் ஷட்டரை உடைத்தனர். சத்தம் கேட்டு பக்கத்து செல்போன் கடையில் இருந்த காவலாளி ரத்தின ராஜு தடுக்க ஓடிவந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும் சரமாரியாக தாக்கினர். அதே சாலையில் உள்ள நிதி நிறுவன த்தின் ஷட்டரை உடைத்து அதிலிருந்து டிவி, கம்ப்யூட்டர், மானிட்டர், ஆட்டோ செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து பழைய ஆந்திரா பேங்க் சாலைப்பகுதிக்கு சென்று ஒருவரை தாக்கி அவரது செல்போன் பறித்தனர்.
இதையடுத்து சுத்த பள்ளி, டோங்கா ஆகிய இடங்களில் கடைகளை உடைத்து கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
காலையில் கடை உரிமையாளர்கள் கடையை திறக்க வந்தபோது ஒரே இரவில் அடுத்தடுத்து 10 கடைகளில் 2 காவலாளிகள் கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அமராவதி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். டிஐஜி திரிவிக்ரம வர்மா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட 2 காவலாளிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையில் ஈடுபட்டது டோங்லீ நகர், கோபால்பேட்டை, பண்டரிபுரம் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் என தெரிய வந்தது.
உடனடியாக 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.