என் மலர்
இந்தியா
கல்லூரி மாணவர்கள் 2 பேர் திடீரென மயங்கி விழுந்து மரணம்
- நள்ளிரவு 2 மணி அளவில் பிரோஜா கான் திடீரென அலறி கூச்சலிட்டபடி படுக்கையில் மயங்கி விழுந்தார்.
- 20 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்கா மாவட்டம், சிலக் கலூரி பேட்டை, பசுமலை சேர்ந்தவர் பஷீர் பாஷா. இவரது மகன் பிரோஜா கான் (வயது 17).
இவர் சிலக்கலூரி பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர் மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரோஜா கான் உள்ளிட்ட குடும்பத்தினர் உணவு அருந்திவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் பிரோஜா கான் திடீரென அலறி கூச்சலிட்டபடி படுக்கையில் மயங்கி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் அவரது அறைக்குச் சென்று மகனை எழுப்ப முயன்றனர்.
ஆனால் அவரது உடல் அசைவின்றி இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரது வாயில் தண்ணீர் ஊற்றி பார்த்தனர்.
தண்ணீர் உள்ளே இறங்காததால் சந்தேகம் அடைந்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நன்றாக படித்து வந்த தனது மகன் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருந்தார். ஆனால் திடீரென மாரடைப்பால் இறந்ததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதேபோல் ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டம், அச்சம் பள்ளி தாண்டா பகுதியை சேர்ந்தவர் தனுஜ் நாயக் (வயது 19). இவரது குடும்பத்தினர் தற்போது பெங்களூரில் வசித்து வருகின்றனர்.
தனுஷ் நாயக் அனந்தபூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்மசி படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனுஜ் நாயக் கபடி விளையாடி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
தனுஷ் நாயக்கை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் நேற்று இரவு அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் நாயக் பரிதாபமாக இறந்தார்.
கபடி விளையாடிய போது தனுஜ் நாயக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக அவரது உறவினர்கள் கூறினார்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வந்த நிலையில், ஆந்திராவில் 20 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.