என் மலர்
இந்தியா

"மகா கும்பமேளா கூட்டநெரிசலில் 2000 பக்தர்கள் உயிரிழப்பு.." சஞ்சய் ராவத் பரபரப்பு புகார்

- பாஜக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மறைகிறது
- கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி 2,000 பேர் இறந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆனால் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக அகிலேஷ் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நேற்று பாரளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர் பாஜக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மறைக்கிறது, அழிக்க நினைக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய [உத்தவ் தாக்கரே பிரிவு] சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "4-5 நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, அது கூட்ட நெரிசல் அல்ல, வதந்தி என்று கூறப்பட்டது. பின் 30 பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. அந்த எண்ணிக்கை உண்மையா? அதை மறைக்காதீர்கள். ஒருவர் இறந்தாலும் நாம்தான் பொறுப்பு.. கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி 2,000 பேர் இறந்துள்ளனர்.
இந்த துயரத்திற்கு "மோசமான நிர்வாகமே" காரணம்.மகா கும்பமேளாவை "அரசியல் சந்தைப்படுத்தலுக்கான நிகழ்வாக மாற்றியுள்ளனர். மற்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் பிரதமர் மற்றும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கும் என்று தெரிவித்தார்.
இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவைத் தலைவர் புள்ளிவிவரத்துக்கான ஆதரத்தை கோரினார். முன்னதாக காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததாகக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.