search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: குமரி மாவட்டத்திலும் சாரல் மழை பெய்தது
    X

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: குமரி மாவட்டத்திலும் சாரல் மழை பெய்தது

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இன்று தொடங்கிய மழை வருகிற 10-ந்தேதி வரை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்கு பருவ மழை ஆரம்பமாகும்.

    ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் வரை இந்த மழை நீடிக்கும். கேரளாவில் தொடர்ச்சியாக பெய்யும் மழையால் தமிழகத்தின் தென்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும். குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் உயரும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்க தாமதமானது. இன்று காலையில் தான் பருவமழை பொழிய தொடங்கியது. இதனை திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்று தொடங்கிய மழை வருகிற 10-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பெய்யும்.

    பல இடங்களில் மிக கனத்த மழையாக பெய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேரிடர் பணிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் குமரி மாவட்டத்திலும் மழை பெய்ய தொடங்கும். அதற்கேற்ப மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்தபடி இருந்தது.

    குலசேகரம், திருவட்டார், பொன்மனை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தபடி இருந்தது. இதனால் இனிவரும் நாட்களில் அணைகளுக்கு கணிசமான நீர் வரத்து இருக்கும் என்று பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் இனி திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் கொட்டும். சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவார்கள்.

    மலையோர பகுதிகளிலும் நல்ல மழை பெய்கிறது. இன்று காலை 8 மணி வரை பெய்த மழையில் அதிகபட்சமாக பாலமோரில் 48.6 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது.

    திருவட்டார் பகுதியில் பெய்த மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு பல வீடுகளில் மின்சார சாதனங்களும் பழுதானது.

    மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவை பழுதானதால் மக்கள் அவதிப்பட்டனர். வீடுகளுக்கு மின்சப்ளை இல்லாததாலும் அவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
    Next Story
    ×