search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசின் வழக்கை சட்டப்படி சந்திப்போம்: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
    X

    தமிழக அரசின் வழக்கை சட்டப்படி சந்திப்போம்: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

    காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாது என்றும், தமிழக அரசின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்படி சந்திப்போம் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
    பெங்களூரு:

    காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாது என்றும், தமிழக அரசின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்படி சந்திப்போம் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.

    கர்நாடகம் காவிரியில் இந்த ஆண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் 50.052 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கன அடி) தண்ணீரை பாக்கி வைத்து இருக்கிறது. இதனால் டெல்டா பகுதியில் சம்பா பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பாக்கி வைத்துள்ள தண்ணீரை, உடனடியாக தமிழகத்துக்கு வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கடந்த வியாழக்கிழமை பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து, காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டனர்.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கர்நாடக அரசை வலியுறுத்தி உள்ளன.

    இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பெங்களூவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார், கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா, ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி, பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மந்திரிகள் பரமேஸ்வர், எம்.பி.பட்டீல் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினை குறித்தும், காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு மீது அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய தலைவர்கள், கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததாலும், அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறினார்கள். அத்துடன் இந்த பிரச்சினையில் அரசு எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் கூறினார்கள். தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பது என்று இந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நதிநீர் பங்கீடு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் எப்போதும் கர்நாடக அரசுக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளன. தற்போதும் அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிப்பதாகவும், அரசுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளன.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 4 அணைகள் உள்ளன. இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால், அந்த அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 51 டி.எம்.சி. தண்ணீர் தான் இருக்கிறது. மேலும் அணைகளுக்கு நீர் வரத்தும் குறைவாகவே உள்ளது.

    பெங்களூரு, மண்டியா, மைசூரு மாவட்டங்களுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் குடிநீருக்காக மட்டும் 40 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. காவிரி பாசன பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு உள்ளிட்ட பிற பயிர்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், காவிரியில் 50 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. நம்முடைய தேவைக்கே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் வழங்க முடியும்? இதனால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு சாத்தியமே இல்லை. தமிழக விவசாயிகள் என்னை சந்திக்கும் போது, இதே கருத்தைத்தான் அவர்களிடம் கூறினேன்.

    எனவே, காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை கர்நாடகம் சட்டப்படி சந்திக்கும். தமிழக அரசின் இடைக்கால மனு வருகிற செப்டம்பர் 2-ந்தேதி விசாரணைக்கு வரும் போது, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில் கர்நாடகம் இருப்பதை தெரிவிப்போம். கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் குடிநீர் தேவை, கர்நாடகத்தின் உண்மையான சூழ்நிலை குறித்த வாதங்களை கர்நாடக அரசு தரப்பில் எடுத்து வைப்பது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “தமிழகத்துக்கு இதுவரை 24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாகவும், மேட்டூர் அணையில் தற்போது 34 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாகவும் கூறினார்.

    காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு மூத்த வக்கீல் நாரிமன் கூறியது முடிந்து போய் விட்டது என்றும், அதுபற்றி பேச தேவையில்லை என்றும் அப்போது சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×