search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளிமண்டல ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் சோதனை வெற்றி: ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு
    X

    வளிமண்டல ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் சோதனை வெற்றி: ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு

    வளிமண்டல ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நடத்தி, அமெரிக்கா, ரஷியா வரிசையில் இந்தியா சேர்ந்தது. விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    பெங்களூரு:

    வளிமண்டல ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நடத்தி, அமெரிக்கா, ரஷியா வரிசையில் இந்தியா சேர்ந்தது. விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ராக்கெட் என்ஜின் தொழில் நுட்பத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

    பொதுவாக ராக்கெட் என்ஜின்கள் எரிபொருட்களாலும், ஆக்சிடைசராலும் (ஆக்சிஜன்) இயங்கும். ஆனால் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவை மட்டும் ஸ்கிராம்ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தினை பரிசோதித்து வெற்றி கண்டுள்ளன. இந்த தொழில் நுட்பத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை என்ஜின் எடுத்துக்கொள்ளும். இதனால் ராக்கெட் எடை குறைவாக இருக்கும். திறன் மிக்கதாகவும் இருக்கும். பல மடங்கு செலவு மிச்சமாகும்.

    இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள், முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ஸ்கிராம்ஜெட் என்ஜினை
    உருவாக்கினார்கள். இந்த என்ஜின் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை ஆக்சிடைசராகவும் (ஒட்சியேற்றி) கொண்டு இயங்குவதாகும்.

    இந்த ஸ்கிராம்ஜெட் என்ஜின்கள் இரண்டை ஏ.டி.வி. செலுத்து வாகனத்தில் (ராக்கெட்டில்) பொருத்தி, விண்வெளியில் செலுத்தி சோதிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் செய்துவந்தனர்.

    அதைத் தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஸ்கிராம்ஜெட் என்ஜின் பொருத்திய ஏ.டி.வி. ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தினர். அப்போது அது, நெருப்பை கக்கிக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த சோதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் கிரண்குமார் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    3 ஆயிரத்து 277 கிலோ செலுத்து எடை கொண்ட ராக்கெட் தனது 300 விநாடிகள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 320 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடலில் விழுந்தது.  
    இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை, ஒரு புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது. இதன்மூலம் நமது நாடு, அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வரிசையில் சேர்ந்துள்ளது.

    இந்த சாதனை குறித்து சென்னையில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் கே. சிவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இது விண்வெளிப்பயணத்தில் முதல் கட்ட நடவடிக்கை ஆகும். ஒரு முழுமையான ராக்கெட்டை செலுத்துவதற்கு பயன்படுத்த உகந்த என்ஜினை உருவாக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்.

    இந்தியாவில் தயாரிப்போம் என்னும் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கம்தான், ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனை. இப்போது சோதிக்கப்பட்டுள்ள என்ஜின் 5 விநாடிகள் எரியும் சக்தி கொண்டது. ஒரு முழுமையான ராக்கெட் இயங்குவதற்கு ஆயிரம் விநாடிகளுக்கு மேல் எரியும் சக்தி வேண்டும்.

    முழுமையான ராக்கெட்டை அனுப்புவதற்கு ஏற்ற என்ஜினை தயாரிப்பதற்கு இன்னும் பல சோதனைகளை கடந்து செல்ல வேண்டும்.

    தற்போது செலுத்து வாகனங்கள் 200 டன்களுக்கு மேல் ஆக்சிஜன் எடுத்துச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மேம்பட்ட தொழில் நுட்பம் கொண்ட ஸ்கிராம்ஜெட் என்ஜின், தனக்கு தேவையான ஆக்சிஜனை வளிமண்டலத்தில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதனால் செலுத்து வாகனத்தின் எடை மிக மிக குறைவாக இருக்கும்.

    குறைவான எடையுடன், சுமக்கும் திறனும் மேம்படும். செலவும் பல மடங்கு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய விஞ்ஞானிகளின் சாதனையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி உள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், 'எதிர்காலத்துக்கு உகந்த ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்காக இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள். இந்தியா உங்களால் பெருமை கொள்கிறது' என கூறி உள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், 'நமது விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்புக்கும், சிறப்புக்கும் ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனை வெற்றி, சான்றாக அமைந்துள்ளது. இஸ்ரோவுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளும், விண்வெளி திட்டங்களும் இந்தியாவை எப்படி பெருமைப்பட வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். மறுபடியும் பார்க்கிறோம்' என கூறி உள்ளார்.
    Next Story
    ×