என் மலர்
செய்திகள்
சித்தூர் அருகே உரமூட்டையுடன் லாரி கடத்தல்: 3 பேர் கைது
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் ராமசமுத்திரம் பஸ் நிலையம் அருகில் கடந்த மாதம் 23-ந்தேதி யூரியா மூட்டைகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு லாரி திடீரெனக் காணவில்லை.
லாரி டிரைவர் குருநாதரெட்டி என்பவர் கடந்த மாதம் 26-ந்தேதி ராமசமுத்திரம் போலீசில், யூரியா உர மூட்டைகளுடன் ஓட்டி வந்த லாரியை, ராமசமுத்திரம் பஸ் நிலையம் அருகில் நிறுத்தி விட்டு, அங்குள்ள ஒரு ஓட்டலுக்குச் சாப்பிட சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ கடத்திச் சென்று விட்டதாக புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தப்பட்ட லாரியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் போலீஸ் விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் லாரி, கர்நாடக மாநிலம் அமிதிக்கல் பகுதியில் உள்ள ஒரு ஏரி அருகே நிற்பதாக தெரிய வந்தது. மேலும் லாரியை கடத்திச் சென்ற மர்மநபர்கள், அதன் சக்கரங்களை கழற்றி அப்பகுதியில் வசித்து வரும் ரெட்டியப்பா, வெங்கடப்பா, ராஜேந்திரன், உமேஷ் ஆகியோரிடம் விற்று விட்டதாக தெரிய வந்தது.
லாரி சக்கரங்களை வாங்கிய 4 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கர்நாடக மாநிலம் முல்பாகல் தாலுகா பாலசந்திரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (வயது 32), அமிதிக்கல் பகுதியைச் சேர்ந்த அனுமப்பா (32), விஜயகுமார் (26) ஆகியோர் விற்பனை செய்ததாக கூறினர்.
இதையடுத்து 3 பேரை கர்நாடக மாநிலம் பரிஜேப்பள்ளியில் இருந்தபோது போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் 3 பேரும் கூட்டாக சேர்ந்து கடந்த சில நாட்களாக சித்தூர், வி.கோட்டா ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளை திருடிச் செல்வது மற்றும் லாரிகளில் உள்ள ஜாக்கி, டயர்கள், இதர பொருட்கள் ஆகியவற்றை திருடி விற்பனை செய்து வந்ததாக கூறினர்.
கடந்த மாதம் 23-ந்தேதி ராமசமுத்திரம் பஸ் நிலையம் அருகில் யூரியா உர மூட்டைகளுடன் நிறுத்தி வைத்திருந்த லாரியை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு லாரி, 31 சக்கரங்கள், 10 ஜாக்கி மற்றும் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிப்பு ரூ.17 லட்சம் ஆகும். கைதான சிவராஜ், அனுமப்பா, விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.