என் மலர்
செய்திகள்
டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் மோடி-அமித்ஷா உருவபொம்மை எரிப்பு: விசாரணைக்கு உத்தரவு
புதுடெல்லி:
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் தசராவிழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் 10 தலை கொண்ட ராவணனின் உருவபொம்மையை மாணவர்கள் கொளுத்தினர். 10 தலைகளுக்கான படங்களில் பா.ஜனதா தலைவர்களின் உருவப்படங்களை வைத்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரின் உருவங்களை படங்களாக பொருத்தி மாணவர் அமைப்பினர் கொளுத்தினர்.
யோகா குரு ராம்தேவ், ஆஸ்ரம் பாபு, நாதுராம் கோட்சே, சாத்வி, நேரு பல்கலைக்கழக வேந்தர் ஜெகதீஷ்குமார் ஆகியோர் உருவப்படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன. பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டவாரே மாணவர்கள் உருவபொம்மையை எரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி உருவப் பொம்மையை எரித்தது தொடர்பாக நேரு பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பல்கலைக்கழக மாணவர்கள் அப்சல்குரு நினைவு தினத்தை கடை பிடித்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார்.