search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி தாட்சாயிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை படத்தில் காணலாம்
    X
    சிறுமி தாட்சாயிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை படத்தில் காணலாம்

    கர்நாடகாவில் சர்க்கரை என நினைத்து யூரியா உரம் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பலி

    கர்நாடகாவில் சர்க்கரை என நினைத்து யூரியா உரம் சாப்பிட்ட 8 வயது சிறுவன் பலியானான். அவனது தங்கைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள பாலசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு உரம் போடுவதற்காக மூட்டை மூட்டையாக யூரியா உரம் வாங்கி, அதனை வீட்டில் அடுக்கி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் சேகர் நேற்று தோட்ட வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது அவருடைய குழந்தைகள் லட்சுமி காந்தன் (வயது 8) மற்றும் தாட்சாயிணி (6) ஆகிய இருவரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர்.

    தந்தை சேகர் வெளியே சென்றதும் சிறிது நேரம் கழித்து விளையாடி கொண்டிருந்த 2 பேரும் வீட்டில் அடுக்கி வைத்திருந்த யூரியா மூட்டையை பிரித்தார்கள். பின்னர் அதில் இருந்த யூரியா உரத்தை சர்க்கரை என நினைத்து அதனை எடுத்து 2 பேரும் சாப்பிட்டு விட்டார்கள். இதனால் லட்சுமி காந்தனும் அவரது தங்கை தாட்சாயிணியும் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து விழுந்தனர்.

    இதையடுத்து தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர் மகளும், மகனும் வீட்டில் மயங்கி கிடப்பதை கண்டு கதறி அழுதனர். உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு தும்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் லட்சுமி காந்தன் பரிதாபமாக இறந்தான். சிறுமி தாட்சாயிணிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மருத்துவமனையின் டாக்டர்கள் கூறுகையில், எங்களது மருத்துவமனைக்கு வந்ததும், உடனே 2 பேரையும் சோதனை செய்து பார்த்தோம். அப்போது லட்சுமி காந்தன் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாட்சாயிணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறோம். சிறுமியின் உடல் நிலை குறித்து டாக்டர்களும் நர்சுகளும் முழு நேரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தற்போது பெற்றோர் உ‌ஷராக இருக்க வேண்டும். கோடை விடுமுறையை யொட்டி குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். இதனால் வி‌ஷம் கலந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும், அதனை அவர்களின் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக்கூடாது. குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. எனவே பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×