search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் நகராட்சி தேர்தலில் வன்முறை
    X

    மேற்கு வங்காளத்தில் நகராட்சி தேர்தலில் வன்முறை

    மேற்கு வங்கத்தின் 7 நகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தின் 24 பர்கானாக்கள், முர்ஷிதாபாத், வடக்கு-தினஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 நகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது. பல இடங்களில் வாக்குச்சாவடிகளையும் அவர்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்தக்கோரி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று கொல்கத்தாவில் மாநில தேர்தல் கமிஷனரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்றனர். ஆனால் அவர்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு மற்றும் பல்வேறு ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களை நடத்தி பெரும் வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதனால் வாக்காளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் மிகுந்த பீதியடைந்ததாகவும் எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளனர்.

    எனவே ஆளுங்கட்சியினரால் கேலிக்கூத்தாக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தலை ரத்து செய்து விட்டு, மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×