என் மலர்
செய்திகள்
X
ஒடிசா: மேம்பாலம் இடிந்து விழுந்து ஒருவர் பலி - 15 பேர் காயம்
Byமாலை மலர்10 Sept 2017 4:38 PM IST (Updated: 10 Sept 2017 4:38 PM IST)
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் புதிதாக கட்டப்பட்டுவரும் ரெயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும், 15 பேர் காயமடைந்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் பொமிகல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ரெயில்வே மேம்பாலத்தில் சுமார் 20 பேர் இன்று காலை கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்துகுறித்த தகவலறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசாரும், மீட்புப்படையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலியானவரின் மகள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் முதல்வர் நவின் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக இரண்டு இஞ்சினியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
X