என் மலர்
செய்திகள்
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: காஷ்மீரில் தேசிய புலனாய்வு படை 45 இடங்களில் சோதனை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயற்சிக்கும் போது தாக்குதல் நடத்துவதால் என்கவுண்டர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள விமான படை தளத்தில் ஆளில்லா விமானம் (டிரோன்) தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்த டிரோன் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. அதன் பின் டிரோன்கள் எல்லை அருகே பறந்து வந்தபோது அதனை பாதுகாப்பு படையினர் சுட்டனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிப்பதை அடுத்து அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு டிரோன்கள் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) பல இடங்களில் சோதனை நடத்தியது.
டிரோன் தாக்குதலுக்கு காஷ்மீரில் இருந்து யாராவது உதவி செய்தார்களா? என்பது தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு துறை அமைப்பு மீண்டும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் அரைத்நாக், தோடா, கிஷ்த்வார், ரம்பன், பத்காம், ரஜோரி, ஷோபியான் உள்பட 14 மாவட்டங்களில் 45 இடங்களில் சோதனை நடத்தினர்.
குறிப்பாக ஜமாத்- இ-இஸ்லாமி (ஜெ.இ. எல்) அமைப்பின் உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும் இதில் ஒரு அறக்கட்டளையும் அடங்கும்.
ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப் படையினர் பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். சோதனையையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சோதனைகள் தொடர்பாக புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஜெ.இ.எல். அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. கடந்த மாதம் உள்துறை அமைச்சகம் ஜெ.இ.எல் அமைப்பின் வளர்ந்து வரும் செல்வாக்கு குறித்து மதிப்பாய்வு செய்து விவாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பயங்கரவாத தொடர்பு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...உ.பி.: கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய தாழ்வான பகுதிகள்