search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தம்
    X
    அமித் ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தம்

    அசாமில் கர்பி அங்லாங் தனி மாநிலம் கோரிய 6 இயக்கங்களுடன் அமைதி ஒப்பந்தம்

    அமைதி ஒப்பந்தத்தின்படி 1000 போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவார்கள் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
    புதுடெல்லி:

    வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை முறியடித்து அமைதியை உருவாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அசாமில் போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதப் போராட்டம் நடத்திய ஆயுதக் குழுக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், அசாமில் இருந்து கர்பி அங்லாங் பகுதியை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதப் போராட்டம் நடத்திய 6 இயக்கங்களுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் கர்பி இயக்கங்களின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

    இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, “ஒப்பந்தத்தின்படி 1000 போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவார்கள். அசாமில் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய சாதனை” என்றார்.

    இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்றும், கர்பி அங்லாங் மற்றும் அசாம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்றும் உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்பி அங்லாங் வளர்ச்சிக்காக அசாம் அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
    Next Story
    ×