என் மலர்
இந்தியா
X
உத்தரகாண்ட் தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளரை எதிர்த்து மனைவி சுயேட்சையாக போட்டி
Byமாலை மலர்30 Jan 2022 12:38 PM IST (Updated: 30 Jan 2022 12:38 PM IST)
உத்தரகாண்ட் தேர்தலில் சோமேஷ்வர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் பல்வந்த் ஆர்யாவின் மனைவி மதுபாலா சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
அல்மோரா:
உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற பிப்ரவரி 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்துள்ளன.
சோமேஷ்வர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக பல்வந்த் ஆர்யா அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா கட்சியில் இருந்த பல்வந்த் ஆர்யா அக்கட்சி சார்பில் போட்டியிட தேர்தல் சீட் கேட்டு இருந்தார். மேலும் தனது மனைவி மதுபாலாவுக்கும் தேர்தல் டிக்கெட் வழங்கும்படி கேட்டார். ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க பா.ஜ.க. மறுத்துவிட்டது.
சோமேஷ்வர் தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ.வும் அமைச்சரான ரேகா ஆர்யாவுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது.
இதனால் பா.ஜனதாவில் இருந்து வெளியேறிய பல்வந்த் ஆர்யா சமாஜ்வாடி கட்சியில் இணைந்து சோமேஷ்வர் தொகுதியில் போட்டியிட தேர்தல் டிக்கெட்டை பெற்றார். தற்போது அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் பல்வந்த் ஆர்யாவின் மனைவி மதுபாலாவும் சோமேஷ்வர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவையும் அவர் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.
அந்த தொகுதியில் கணவரை எதிர்த்து மனைவி போட்டியிடுகிறார் என்றாலும் அத்தொகுதியில் ஓட்டுகளை பிரிக்க தனது மனைவியை போட்டியிட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்வந்த் ஆர்யா கூறும்போது, ‘‘நான் பா.ஜனதா கட்சிக்காக 26 ஆண்டுகள் உழைத்து இருக்கிறேன். ஆனால் தேர்தல் டிக்கெட் ஒதுக்கீட்டின் போது என்னை ஒதுக்கி விட்டனர். நான் இந்த தொகுதியில் சுகாதார கட்டமைப்பு, நீண்ட தூரம் செல்வதற்கான சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த விரும்புகிறேன். எனது மனைவி வெற்றி பெற்றால் அவர் பெண்களின் நலன்கள் மற்றும் முன்னேற்றத்துக்காக பாடுபடுவார்’’ என்றார்.
Next Story
×
X