என் மலர்
இந்தியா

எம்.பி.ஏ. நுழைவுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களிடம் மோசடியில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது
- எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.
- மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
மும்பை:
மராட்டியத்தில் என்ஜினீயரிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம், பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது. அந்த கும்பல் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதாகவும், பிரபல கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாகவும் கூறி மாணவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கேட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அமைக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த கும்பல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவுகளை திருடி பிரபல கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடி தொடர்பாக டெல்லியை சேர்ந்த அபிஷேக் ஸ்ரீவட்சாவ், சேத்தன் குமார், அம்பிரிஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.