search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலை விமான நிலையம் அமைக்க 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன
    X

    சபரிமலை விமான நிலையம் அமைக்க 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன

    • சபரிமலையில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • 352 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுவாழ்வுக்கு நடவடிக்கை வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக எழுந்தது.

    இதையடுத்து சபரிமலையில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சபரிமலை, எரிமேலி தெற்கு மற்றும் மணிமாலை ஆகிய நகரங்களுக்கு இடையே அமைய உள்ளது.

    கேரள மாநிலத்தின் 5-வது சர்வதேச விமான நிலையமாக உருவாக இருக்கும் இந்த விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.


    சபரிமலை விமான நிலைய திட்டத்துக்கு மொத்தம் 1,039.879 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்கள் மணிமலை மற்றும் எரிமேலி தெற்கு ஆகிய பகுதிகளில் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்குள்ள 352 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுவாழ்வுக்கு நடவடிக்கை வேண்டும்.

    விமான நிலையம் அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய மரங்கள் மற்றும் மாற்றப்பட வேண்டிய வீடுகள் உள்ளிட்ட விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. விமான நிலையம் அமைக்க மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றில் ரப்பர் மரங்கள் 3.3 லட்சம், தேக்கு மரங்கள் 2 ஆயிரத்து 492, காட்டுப்பலா மரங்கள் 2 ஆயிரத்து 247, பலா மரங்கள் 1131, மகோகனி மரங்கள் 828, மா மரங்கள் 184 ஆகும்.

    அது மட்டுமின்றி சில கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் பாதிக்கப்படுகின்றன. அவற்றுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த தகவல்கள் சபரிமலை சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலைய திட்டம் தொடர்பாக கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×