என் மலர்
இந்தியா

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரூ.4,300 கோடி நிதி குவித்த 6 கட்சிகள்- ஆய்வில் தகவல்
- சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
- பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.
இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.
சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.