என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு தொடருவோம்- ஆ.ராசா
    X

    வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு தொடருவோம்- ஆ.ராசா

    • நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
    • அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார்.

    புதுடெல்லி:

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வக்வு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணித்த பாராளுமன்ற கூட்டுக்குழு இறுதியாக கடந்த மாதம் பாட்னா, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய 3 நகரங்களிலும் கருத்துகளை கேட்டது. அதனை கூட்டுக்குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட கால அவகாசம் முடியும் முன்பே பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் சட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

    பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய எதிர் கருத்துகளை குழுத்தலைவர் நீக்கியுள்ளது குறித்து சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது அரசு சார்பில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து 150-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் குரல் எழுப்பினோம்.

    இந்த நிலையில், நீக்கப்பட்ட பகுதிகளை இணைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் கருத்துகள் நீக்கப்படவில்லை என மாநிலங்களவையில் பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி பேசியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் மத்திய அரசின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது.

    அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நீக்கியதை உள்துறை மந்திரியே ஒத்துக்கொண்டுள்ளார். அப்படியானால் நீக்க உத்தரவிட்டது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மசோதா, பாராளுமன்றத்தில் மசோதா விவாதத்துக்கு வரும்போது கடுமையாக எதிர்ப்போம். மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். அதன் மூலம் மசோதாவை தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×