search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கை எதிரொலி- அதானி குழுமத்துக்கு ரூ.4.17 லட்சம் கோடி இழப்பு
    X

    அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கை எதிரொலி- அதானி குழுமத்துக்கு ரூ.4.17 லட்சம் கோடி இழப்பு

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்துக்கு கவுதம் அதானி சரிவு.
    • அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை.

    மும்பை:

    பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக தொழில் அதிபர் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியதன் எதிரொலியாக, அந்தக் குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

    ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, ஏராளமான தொகை கடன் வாங்கி அதனை மறைப்பது போன்ற முறைகேடான நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. மேலும், வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அந்த அறிக்கை வெளியானதன் எதிரொலியாக, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியிருந்த முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதனை குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினர். இதன் காரணமாக, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டே நாட்களில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை ரூ.4.17 லட்சம் கோடி வீழ்ச்சிடைந்தது.

    இதன் மூலம், கவுதம் அதானியின் சொத்து மதிப்பிலும் ரூ.4.17 லட்சம் கோடி குறைந்ததால், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகின் 3-வது பெரிய பணக்காரராக இருந்த அவர். தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னதாக, அந்த ஆய்வறிக்கை குறித்து அதானி குழுமத்தின் சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தவறான குறிக்கோளுடன் போதிய ஆய்வு செய்யாமல் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் எச்சரித்திருந்தது.

    இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தங்களது அறிக்கையில் கேட்கப்பட்ட 88 நேரடி கேள்விகளில் ஒரு கேள்விக்குக் கூட அதானி குழுமத்திடமிருந்து பதில் இல்லை. 2 ஆண்டு கால தீவிர ஆய்வுக்குப் பிறகே அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதனை சட்டரீதியில் எதிர்க்க வேண்டுமென்று அதானி குழுமம் உண்மையிலேயே நினைத்தால், தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் அந்தக் குழுமம் வழக்கு தொடரலாம் என்று சவால்விட்டது.

    தற்போது நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். பங்குச் சந்தையின் இரண்டே வர்த்தக நாள்களில் அதானி குழுமம் ரூ.4.17 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது தொழில்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×