என் மலர்
இந்தியா

ஆதிலா நஸ்ரின் - பாத்திமா நூரா
சென்னையில் சேர்ந்து வசிக்கும் தன்பாலின இளம்பெண்கள்- அடையாளத்தை மறைக்காமல் வீடு வாடகைக்கு எடுத்ததாக பேட்டி

- எங்களுக்குள் இருக்கும் பழக்கம் பற்றி தெரிய வந்ததும் பெற்றோர் பிரிக்கப் பார்த்தனர்.
- எங்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் பெற்றோர் உடலால் காயப்படுத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவர் கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி தனது தோழி பாத்திமா நூராவுடன் சென்னையில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
தன்பாலின சேர்க்கையில் உள்ள இவர்கள், வளைகுடா நாட்டில் பெற்றோர் வேலை பாரத்தபோது, தோழிகளாகி உள்ளனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி தன்பாலின சேர்க்கை ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா கூறியதாவது:-
எங்களுக்குள் இருக்கும் பழக்கம் பற்றி தெரிய வந்ததும் பெற்றோர் பிரிக்கப் பார்த்தனர். பாத்திமா நூராவை கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நான் (ஆதிலா நஸ்ரின்) கேரளா வந்து பாத்திமாவை சந்தித்தேன். இருவரும் கடந்த மே மாதம் 19-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறியபோதும் குடும்பத்தினர் பாத்திமாவை வலுக்கட்டாயமாக பிரித்து சென்று விட்டனர்.
மேலும் என் மீது கடத்தல் புகாரும் கொடுத்ததால் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அங்கு நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் 31-ந் தேதி அனுமதி கிடைத்தது. அதன்பேரில் இருவரும் சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாதங்களாக வசித்து வருகிறோம்.
எங்கள் உணர்வை புரிந்து கொள்ளாமல் பெற்றோர் உடலால் காயப்படுத்தினர். ஆனால் கோர்ட்டு உத்தரவால் தற்போது மகிழ்ச்சியாக உளளோம். சென்னையில் எங்கள் அடையாளத்தை மறைக்காமல் தான் வீடு தேடினோம்.
இருவரும் வேலை பார்ப்பதால், பொருளாதார சுதந்திரம் இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் தன்பாலின தம்பதியினர் சமம் தான். ஒரே பாலின உறவு குறித்த புரிதலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் தேவை இருக்கிறது. பெரும்பாலான பெற்றோருக்கும் இதுகுறித்து புரிதல் இருப்பதில்லை.
கோர்ட்டு படியேறி சட்ட உரிமையை நிலைநாட்டியதன் மூலம் தற்போது யாருடைய தலையீடும் இல்லாமல் பறவையைப் போல சுதந்திரமாக வாழ்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.