என் மலர்
இந்தியா
பாராளுமன்ற தேர்தலுக்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது- சரத்பவார்
- சட்டசபை , உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
- டெல்லி தேர்தலை பொறுத்தவரை நாம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும், மாநிலத்தில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியிலும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்ததில் இருந்து கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் தனித்து போட்டியிடப் போவதாக, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அறிவித்து இருந்தது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் இந்த முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி தேசிய பிரச்சனை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. சட்டசபை , உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில், அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்தனியாக போட்டியிடுவதா என்று இன்னும் சில நாட்களில் அனைவருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். கூட்டணிக்குள் நாங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருக்கிறோம்.
டெல்லி தேர்தலை பொறுத்தவரை நாம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.