search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மன்னிப்பா? எச்சரிக்கையா? - சர்ச்சைக்குள்ளான ராமேஸ்வரம் கஃபே ஓனரின் வீடியோ
    X

    மன்னிப்பா? எச்சரிக்கையா? - சர்ச்சைக்குள்ளான ராமேஸ்வரம் கஃபே ஓனரின் வீடியோ

    • உணவகத்தின் உணவு தயாரிப்பு நடைமுறைகளில் இருந்த பல சிக்கல்களை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவர் மன்னிப்பு கேட்கிறாரா? இல்லை எச்சரிக்கை விடுக்கிறரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உணவகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று மீண்டும் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில், 100 கிலோ காலாவதியான உளுத்தம் பருப்பு, 10 கிலோ காலாவதியான தயிர், 8 லிட்டர் காலாவதியான பால் உட்பட உணவகத்தின் உணவு தயாரிப்பு நடைமுறைகளில் இருந்த பல சிக்கல்களை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து, ராமேஸ்வரம் கஃபேயின் இணை நிறுவனர் ராகவேந்திர ராவ் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நாங்கள் சிறிய தவறுகளை செய்துள்ளோம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேவையான மாற்றங்களை செய்கிறோம். மேலும் சிறந்த தயாரிப்பை வழங்க, சிறந்த பொருட்களை எப்போதும் பயன்படுத்துகிறோம். நாங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம் என்பதை ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ராமேஸ்வரம் கஃபேயின் இணை நிறுவனர் ராகவேந்திர ராவ்-வின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அவர் மன்னிப்பு கேட்கிறாரா? இல்லை எச்சரிக்கை விடுக்கிறரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஒரு பயனர், இது மன்னிப்பு கேட்பது போல் இல்லை. நான் ராமேஸ்வரம் கஃபே-யின் ஆதரவாளராகவும், வாடிக்கையாளராகவும் இருந்தேன். ஆனால் அவர்கள் தோசைக்கு கிட்டத்தட்ட ரூ.200 வசூலித்தனர். மோசமான, காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பதை தவிர வேறில்லை என கூறியுள்ளார். மற்றொருவர், இது மன்னிப்பா அல்லது எச்சரிக்கையா? பாடி லாங்குவேஜ் வேறு விதமாக இருக்கிறது. இதைப் பார்த்த பிறகு அங்கு செல்லவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×