என் மலர்
இந்தியா

சட்டசபை தேர்தல்: குஜராத்தில் வெற்றி யாருக்கு?

- குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை.
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை
அறிவிக்கப்பட்டாயிற்று, குஜராத் சட்டசபை தேர்தல் திருவிழா. நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.
திரைப்படங்களுக்கு பூஜை போடுகிற நாளிலேயே படம் விலை போய்விடுகிறமாதிரி, தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டிலேயே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இங்கு வெற்றி வாகை சூடி, 1995-ம் ஆண்டு தொடங்கி சுவைத்து வருகிற வெற்றிக்கனியை மீண்டும் சுவைத்துவிட பா.ஜ.க. துடிக்கிறது.
ஆட்சியை பறிகொடுத்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது, இந்த முறையாவது வெற்றி பெற்று, ஆட்சியைப்பிடித்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறது காங்கிரஸ்.
ஆனால் டெல்லி, பஞ்சாபில் வெற்றி பெற்று, இப்போது ஆம் ஆத்மியின் பார்வை குஜராத் பக்கம் திரும்பி இருக்கிறது. 2024 தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று கனவு வளர்த்து களத்தில் குதிக்கிறது, கெஜ்ரிவாலின் கட்சி.
மும்முனைப் போட்டி தேர்தல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு அணுவளவும் இடம் இல்லை. இந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பதே நாட்டின் பேசுபொருளாக மாறப்போகிறது.
"எங்கள் கட்சியே வெற்றி பெறும். இரட்டை என்ஜின் அரசு மீண்டும் அமையும். பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம்" என்று தேர்தல் அறிவிப்பு வெளியான கணத்திலேயே மார் தட்டி இருக்கிறார், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா.
எந்தவொரு ஆட்சியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறபோது, அதற்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படுவது வாடிக்கை. இப்போது அந்த வகையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராய் திரும்பியுள்ள பிரச்சினைகள் உண்டு.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பில்கிஸ்பானு கும்பல் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு, மோர்பி பால விபத்து, அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்துவிடுவதும் தேர்வு ஒத்திவைப்பும், கடைக்கோடி பகுதிகளில் சுகாதார வசதி-அடிப்படை கல்வி வசதியின்மை, மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமை, சரியான சாலை வசதிகள் இன்மை, அதிகபட்ச மின்கட்டணம், அரசு திட்டங்களுக்கு நில எடுப்பில் அதிருப்தி... இப்படி பா.ஜ.க. அரசுக்கு எதிரான அம்சங்கள் அணிவகுக்கின்றன.
குஜராத்தை சேர்ந்தவர் நாட்டின் பிரதமர் என்ற 'டிரம்ப் கார்டு' கை கொடுக்கும், மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு என்னும் பிரசாரம் வெற்றிதரும் என்று முழுமையாய் நம்புகிறது பா.ஜ.க.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரசின் கனவுக்கு காரணங்கள் உண்டு.
காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் விடுவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குவங்கி, 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதி போன்றவை இந்த முறை கண்டிப்பாய் கைகொடுக்கும், வெற்றி தேடித்தரும் என்பது காங்கிரசின் நம்பிக்கை.
ஆனால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை; சோனியா-ராகுல் பிரசாரம் செய்வார்களா என்பது கேள்விக்குறி; முன்னிலைப்படுத்துவதற்கு கட்சியில் எழுச்சிமிக்க தலைவர்கள் குஜராத்தில் இல்லை என்பதெல்லாம் பின்னடைவுகள்.
பா.ஜ.க., காங்கிரசுடன் மல்லு கட்டப்போகிறது, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இந்தக் கட்சிக்கும் ஆட்சியை கைப்பற்றிவிடும் ஆசை இருக்கிறது. நாங்கள் மாறுபட்ட சக்தி என்னும் பிரசாரம், இலவச மின்சாரம்... வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்... 18 வயதான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என வாக்குறுதிகள் கைகொடுக்கும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இலவச வாக்குறுதிகளை குஜராத் மக்கள் வரவேற்பார்களா, மாட்டார்களா என்பது பட்டிமன்ற விவாதப்பொருள்.
ஆனால் பிரதமர் மோடி தேர்தல் இலவசங்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும்போது, மக்களிடம் இந்த இலவச வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மறுக்கவும் முடியாது. பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களிடம் இது வரவேற்பை பெற்று ஓட்டு வங்கியாக மாறுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அம்சங்கள்.
அதே நேரத்தில் குஜராத் மாநில அரசியலில் ஆம் ஆத்மி கத்துக்குட்டி, குஜராத்தில் ஆம் ஆத்மியில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை, ஓட்டு வங்கி பெயருக்குகூட இல்லை என்பது பாதகமான அம்சங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டு தோல்வி அடைந்தால், அது ஆம் ஆத்மி இனி எடுக்கும் சோதனை முயற்சிகளுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பும் இருக்கிறது.
வெற்றி யாருக்கு?
மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் என்கிற பா.ஜ.க. வாதம், அந்தக்கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம். கட்சிக்கு தலித் தலைமை, வேலை வாய்ப்பு வாக்குறுதிகள், ஆட்சியைப் பறிகொடுத்து கால் நூற்றாண்டு என்ற அனுதாப அலை ஆகியவை காங்கிரசின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையலாம். ஆம் ஆத்மி மாற்றத்துக்கான அரசியல் என்ற வாதம் அதன் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
கடைசி நேர மாற்றங்கள், அதிரடிகள், பிரசாரங்கள் என்ன விதமான அலையை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது.
டிசம்பர் 8 தான் வெற்றியை தீர்மானிக்கும். ஆமாம். அன்றுதான் ஓட்டு எண்ணிக்கை.