என் மலர்
இந்தியா

பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தடுக்க சாக்கடை ஓரங்களில் தடுப்பு வேலி- மாநகராட்சி திட்டம்

- சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
- பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
மும்பை:
மும்பையில் ஆண்டு தோறும் மழைக்காலத்துக்கு முன் சாக்கடை கால்வாய்கள், மித்தி நதியை மும்பை மாநகராட்சி தூர்வாரி வருகிறது. இந்த பணிக்காக அதிகளவில் நிதி செலவிடப்படுகிறது. எனினும் பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதால், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக மாநகராட்சி அதிக செலவு செய்து தூர்வாரும் பணியை மேற்கொண்டும், சாக்கடை கால்வாய்களில் குப்பை குவிந்து கிடப்பதால் விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், கரையோரங்களில் தடுப்பு வேலி அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாாி ஒருவர் கூறுகையில், "சாக்கடை கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள், சாக்கடையில் கொட்டும் குப்பைகள், கழிவுகள் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. வலை, இரும்பு தகடு மூலம் சாக்கடை கால்வாய் ஓரம் 10 அடி உயரம் வரையில் வேலி அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
தடுப்பு வேலி வலை திருட்டை தடுக்க, அவை பழைய இரும்புக்கு விற்பனை ஆகாத அல்லது மறு விற்பனை ஆகாத பொருட்கள் மூலம் செய்யப்பட்டதாக இருக்கும். முதல் கட்டமாக அதிகளவில் குப்பை கொட்டப்படும் இடங்களில் தடுப்பு வேலி அமைக்க உள்ளோம். அதன்பிறகு மற்ற இடங்களில் வேலி அமைக்கப்படும்" என்றார்.