search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இரக்கமின்றி பிஞ்சு மகனை பெண் தொழில் அதிபர் கொன்றது எப்படி?: போலீஸ் வெளியிட்ட திடுக் தகவல்கள்
    X

    இரக்கமின்றி பிஞ்சு மகனை பெண் தொழில் அதிபர் கொன்றது எப்படி?: போலீஸ் வெளியிட்ட திடுக் தகவல்கள்

    • வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகன் சின்மயிடம் பேச கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.
    • மகன் சின்மய், தனது தந்தையிடம் பேச தயாராக இருந்தான்.

    பெங்களூரு:

    பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவர்கள் இருவரும் என்ஜினீயர்கள் ஆவார்கள். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சுசனா சேத் தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்று வல்லுனராக திகழ்ந்து வந்தார்.

    வெங்கட்ராமன் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். அவர் தனது குடும்பத்துடன் யஷ்வந்தபுரம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு சுசனா சேத் கர்ப்பம் அடைந்தார். அப்போதே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்தனர். மேலும் வெங்கட்ராமனுக்கு இந்தோனேசியாவில் வேலை கிடைத்ததால் அவர் அங்கு சென்றுவிட்டார். சுசனா சேத்துக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சின்மய் என்று பெயரிடப்பட்டது.

    அவர்களுக்குள் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் வெங்கட்ராமனும், சுசனா சேத்தும் பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. அதேநேரம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகன் சின்மயிடம் பேச கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது.

    அதன்படி அவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மகன் சின்மயிடம் இந்தோனேசியாவில் இருந்தபடி செல்போன் வீடியோ அழைப்பு மூலம் பேசி வந்தார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி சுசனா சேத் தனது மகனுடன் கோவாவுக்கு சென்றார். அங்கு வடக்கு கோவா கேன்டோலிம் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கினார்.

    மறுநாள் அதாவது 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம்போல் வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசனா சேத்தின் செல்போனுக்கு வீடியோ அழைப்பு விடுத்தார். அப்போது அந்த அழைப்பை எடுத்து பேசிய சுசனா சேத், தனது மகனிடம் போனை கொடுக்காமல், அவன் தூங்கிக்கொண்டிருப்பதாக வெங்கட்ராமனிடம் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் வெங்கட்ராமன், அடிக்கடி சுசனா சேத்தை செல்போனில் அழைத்தபடி இருந்தார். இதனால் சுசனா சேத் கோபம் அடைந்தார். அப்போது அவரது மகன் சின்மய், தனது தந்தையிடம் பேச தயாராக இருந்தான். தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுதும் இருக்கிறான். அவன் அழுத சத்தம் வெங்கட்ராமனுக்கு கேட்டுள்ளது.

    இதனால் அவர் சுசனா சேத்திடம் காட்டமாக பேசி இருக்கிறார். மகனிடம் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது சுசனா சேத், அவனுக்கு உடல்நிலை சரியில்லை. அவன் தூங்க வேண்டும், அதனால் அவன் தூங்கி கண்விழித்த பிறகு போன் செய்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    கணவர் மீது இருந்த ஆத்திரத்தாலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம்பிடித்ததாலும் கோபத்தின் உச்சிக்கே சுசனா சேத் சென்றிருக்கிறார். அதையடுத்து அவர் தனது மகனை கொலை செய்திருக்கிறார். அதாவது சிறுவனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்துள்ளார். அவன் மயங்கியதும் மூச்சை திணறடித்து கொலை செய்திருக்கிறார். மகனின் முகத்தை தலையணை அல்லது துணியால் மூடியும், கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையே அவர் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்ய ஊழியர் வந்ததால், தற்கொலை முடிவை தள்ளிப்போட்டு இருக்கிறார்.

    பின்னர் தனது மகனின் உடலின் அருகேயே சுசனா சேத் அமர்ந்துள்ளார். மாலையில் மீண்டும் அவரது அறையை சுத்தம் செய்ய ஊழியர் வந்திருக்கிறார். அப்போது தான் மறுநாள் காலையில் அறையை காலி செய்து விடுவதாகவும், அப்போது வந்து சுத்தம் செய்து கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். 7-ந் தேதி அன்று இரவு சுசனா சேத் பெரிய கத்தரிக்கோலால் தனது கை நரம்பை அறுத்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. அதையடுத்து அவர் அங்கிருந்த துண்டால் மகனின் உடலில் இருந்த ரத்தக்கறை மற்றும் அறையில் சிந்திக்கிடந்த ரத்தக்கறைகளை துடைத்துள்ளார்.

    பின்னர் மகனின் உடலை ஒரு சூட்கேசில் வைத்துக்கொண்டு அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதற்காக அவர் 8-ந் தேதி அதிகாலையில் காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்.

    சூட்கேசில் இருந்து துர்நாற்றம் ஏதும் வீசாமல் இருக்க அடிக்கடி அவர் வாசனை திரவியத்தை காரில் அடித்து வந்திருக்கிறார். காரில் ஏ.சி.யையும் அதிகரித்து வந்திருக்கிறார். அதுபற்றி டிரைவர் கேட்டபோது சுசனா சேத் மழுப்பலாக பதில் அளித்திருக்கிறார். காரின் முன் இருக்கையில் அமர்ந்து சுசனா சேத் பயணித்து வந்திருக்கிறார். முன் இருக்கையில் அமர்ந்து வழிகாட்டுவதாக டிரைவரிடம் அவர் கூறியிருக்கிறார்.

    இப்படி திக்... திக்... பயணம் மேற்கொண்ட சுசனா சேத், போலீசாரின் துரித நடவடிக்கையால் சிக்கிக்கொண்டார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தனது மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் இதுபற்றி கூறுகையில், இது ஒரு திட்டமிட்ட படுகொலை. அவர் தங்கி இருந்த அறையில் 2 இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தன. ஒன்று பெரியது, இன்னொன்று சிறியது. சிறிய மருந்து பாட்டிலை அவர் அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்களிடம் கூறி வாங்கி வர சொல்லியிருக்கிறார். பெரிய மருந்து பாட்டில் ஏற்கனவே அவர் கொண்டு வந்தது தான். அவர் அளவுக்கு அதிகமாக தனது மகனுக்கு இருமல் மருந்தை கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் தனது மகனை மூச்சை திணறடித்து கொலை செய்திருக்கிறார். அதையடுத்து அவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து மகனின் உடலுடன் பெங்களூருவுக்கு காரில் வந்திருக்கிறார். அப்போது தான் அவரை பிடித்துள்ளோம்.

    கணவன் மீதிருந்த கோபத்தாலும், மகன் அவருடன் பேச வேண்டும் என்று அடம்பிடித்ததாலும் ஆத்திரத்தில் இந்த படுபாதக செயலை அவர் செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சிறுவனின் தந்தை வெங்கட்ராமன் நேற்று முன்தினம் இரவு இந்தோனேசியாவில் இருந்து சித்ரதுர்காவுக்கு வந்தார். அவருடன் அவரது உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர்.

    இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்களிடம் சிறுவன் சின்மயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து தந்தை கதறி அழுதார். பின்னர் அவனது உடல் பெங்களூரு ராஜாஜிநகர் அரிச்சந்திரா காட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    Next Story
    ×