search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொழிலதிபர் தாத்தாவை 73 முறை கத்தியால் குத்திக் கிழித்த  பேரன்.. ஐதராபாத்தில் பரபரப்பு சம்பவம்
    X

    தொழிலதிபர் தாத்தாவை 73 முறை கத்தியால் குத்திக் கிழித்த பேரன்.. ஐதராபாத்தில் பரபரப்பு சம்பவம்

    • மூத்த மகளின் மகன் ஸ்ரீகிருஷ்ணாவை வெல்ஜன் குழுமத்தின் இயக்குநராக நியமித்தார்.
    • சிறுவயதிலிருந்தே தாத்தா தன்னை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    ஐதராபாத்தில் சொத்துப் பிரச்சனையில் 28 வயது பேரன் தனது தொழிலதிபர் தாத்தாவை 73 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைட்ராலிக்ஸ் உபகரணங்கள், கப்பல் கட்டுதல், எரிசக்தி மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் ஈடுபட்டுள்ள 460 கோடி மதிப்புள்ள வெல்ஜன் குழும நிறுவனங்களின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் வி.சி. ஜனார்தன் ராவ் (86 வயது) இருந்தார்.

    இந்நிலையில் அவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 28 வயது பேரன் பேரன் கீர்த்தி தேஜா கைது செய்யப்பட்டார்.

    முதுகலைப் படிப்புக்குப் பிறகு சமீபத்தில் கீர்த்தி தேஜா அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார்.

    ஜனார்தன் ராவ் சமீபத்தில் தனது மூத்த மகளின் மகன் ஸ்ரீகிருஷ்ணாவை வெல்ஜன் குழுமத்தின் இயக்குநராக நியமித்தார். அவர் தனது இரண்டாவது மகள் சரோஜினி தேவியின் மகன் கீர்த்தி தேஜாவுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள பங்குகளை தந்தார்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, அவரும் அவரது தாயார் சரோஜினி தேவியும் தனது தாத்தாவின் வீட்டிற்குச் சென்றனர். தேஜா தனது தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தாயார் தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றார்.பேரனுக்கும் தாத்தாவுக்கும் நிறுவனத்தில் இயக்குநர் பதவி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதத்தின் போது, தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக தாத்தாவை தேஜா குற்றம் சாட்டினார். சிறுவயதிலிருந்தே தாத்தா தன்னை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    ஒரு கட்டத்தில், தேஜா பொறுமை இழந்து, தான் கொண்டு வந்த கத்தியால் தனது தாத்தாவை குத்தியதாகக் கூறப்படுகிறது. தாத்தாவை தேஜா 73 முறை குத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தாத்தாவின் உடலில் பல கத்திக் காயங்கள் இருப்பதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின்போது தேஜாவை தடுக்க அவரது தாயார் சமயலறையில் இருந்து விரைந்தார். ஆனால் தேஜா தனது தாயையும் கத்தியால் குத்தினார்.

    கொலைக்குப் பிறகு, தேஜா கொலையை நேரில் பார்த்த செக்யூரிட்டியை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நான்கு கத்திக்குத்து காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனார்தன் ராவ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    தப்பியோடிய பேரன் தேஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தேஜாவுக்கு போதைப்பழக்கம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உயிரிழந்த ஜனார்தன் ராவ் பல்வேறு நன்கொடைகளை செய்து வந்தவர். ஏலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கும் பெரும் நன்கொடைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×