என் மலர்
இந்தியா

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும், நடத்திக் காட்டுவோம்- ராகுல் காந்தி உறுதி

- ஓபிசி இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்டது.
- ஓபிசி இடஒதுக்கீடு அதிகரிக்கும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.
தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29% இடஒதுக்கீடும் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் 23% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் 2 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் எக்ஸ் பதிவை பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்..
அவரது பதிவில், "தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீடு அதிகரிக்கும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.
தெலுங்காளவில் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை ஏற்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சம பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் 42% இடஒதுக்கீட்டுக்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும், இதன் மூலம் தெலுங்கானாவில் 50% இடஒதுக்கீடு வரம்பு வீழ்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவருக்கும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் கொள்கைகள் உருவாக்கப்படும். தெலுங்கானா அரசு இதற்காக தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு எனும் X-ray மூலம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
தெலுங்கானா இதற்கான வழியை காட்டியுள்ளது. இதுவே நாடு முழுவதும் தேவை. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; நடத்திக் காட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.