search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது புதிய ஊழல் வழக்குப்பதிவு
    X

    கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது புதிய ஊழல் வழக்குப்பதிவு

    • டியாஜியோ குழுமத்தின் இந்திய வணிகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் உள்ள வேறு சில நிறுவனங்கள் மீதும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார். அவரது மத்திய மந்திரி பதவியை தவறாக பயன்படுத்தி அவரது மகன் கார்த்தி சிதம்பரம் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    குறிப்பாக ஐ.என்.எஸ். மீடியா வழக்கு தொடர்பாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதானார். பின்னர் சிதம்பரமும் கைது செய்யப்பட்டு விடுதலையானார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு மதுபான நிறுவனத்துக்கு உதவ லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய ஊழல் வழக்கைப் பதிவு செய்து உள்ளது.

    இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தைச் சோ்ந்த 'டியா ஜியோ' குழுமம், தனது தயாரிப்பான ஜானி வாக்கா் மதுபானத்தை இந்தியாவில் வரியில்லாமல் இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

    இந்த மதுபானங்களை வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை வைத்திருந்த இந்திய சுற்றுலா வளா்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி.), இதற்கு கடந்த 2005-ம் ஆண்டு டியாஜியோவின் செயல்பாட்டுக்கு தடை விதித்தது.

    இதனால் டியாஜியோ குழுமத்தின் இந்திய வணிகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஐ.டி.டி.சி. விதித்த தடையை நீக்க உதவுமாறு காா்த்தி சிதம்பரத்தை டியா ஜியோ குழுமம் அணுகியதாக கூறப்படுகிறது.

    அதற்காக 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடீஜிக் கன்சல்டிங்' நிறுவனம் மூலம் 15 ஆயிரம் டாலரை காா்த்தி சிதம்பரம் ஆலோசனை கட்டணமாக பெற்றுள்ளதாக சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    'அட்வான்டேஜ் ஸ்ட்ரடீஜிக் கன்சல்டிங்' நிறுவனம், காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான எஸ்.பாஸ்கரராமன் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனமாகும். இதே போன்று தமிழகத்தில் உள்ள வேறு சில நிறுவனங்கள் மீதும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது.

    Next Story
    ×