search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அல்லு அர்ஜூன் வீட்டில் கல் வீசி தாக்குதல்: முதல் மந்திரி கண்டனம்
    X

    அல்லு அர்ஜூன் வீட்டில் கல் வீசி தாக்குதல்: முதல் மந்திரி கண்டனம்

    • காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    ஐதராபாத்:

    புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

    அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அல்லு அர்ஜூன் வீட்டின்மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், திரை பிரபலங்கள் வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் சமரசமின்றி டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×