என் மலர்
இந்தியா
கோச்சிங் சென்டர் மரணங்கள்: தூக்கில் தொங்கிய மாணவர்கள்.. 24 மணி நேரத்தில் நடந்த 2 தற்கொலைகள்
- தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
- நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கோட்டாவில் நுழைவுத் தேர்வுக்காக படித்து வந்த 2 மாணவர்கள் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக கோட்டா பயிற்சி மையத்தில் பயின்று வந்த 20 வயது மாணவன் கடந்த புதன்கிழமை தனது தங்கும் விடுதியில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவைச் சேர்ந்த அபிஷேக் லோதா என அடையாளம் காணப்பட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் "என்னால் படிக்க முடியவில்லை.நான் ஜேஇஇ தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன், ஆனால் அது எனக்கு அப்பாற்பட்டது. மன்னிக்கவும்" என்று எழுதி வைத்துள்ளார்
24 மணி நேரத்திற்குள் கோச்சிங் சென்டர் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த அரியானவை சேர்ந்த நீரஜ் என்ற 19 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.
கோச்சிங் சென்டர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் அழுத்தம் மாணவ மாணவிகளை மன ரீதியான நெருக்கடிக்கு உள்ளாக்குவதால் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.