என் மலர்
இந்தியா
ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்த ஏற்பாடு
- சேவல் சண்டை நடத்தப்படும் இடங்களை போலீசார் முன்கூட்டியே கண்டறிந்து நிர்வாகிகளை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
- இந்த ஆண்டு டிரோன் மூலமும் கண்காணிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சேவல் சண்டை நடத்தப்படுகிறது. இந்த சேவல் சண்டையின் போது ரூ. 500 கோடி வரை பந்தயம் கட்டப்படுகிறது.
சண்டையின் போது சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்படுகின்றன. இதனால் தோற்கடிக்கப்படும் சேவல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திர மாநில ஐகோர்ட்டு சேவல் சண்டைக்கு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி ஆண்டுதோறும் சேவல் சண்டைகள் நடத்தப்படுகின்றன.
சேவல் சண்டை நடத்தப்படும் இடங்களை போலீசார் முன்கூட்டியே கண்டறிந்து நிர்வாகிகளை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு டிரோன் மூலமும் கண்காணிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது விஜயவாடா பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த மாவட்டத்தில் 10 இடங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளின் பெயர்கள் இடம்பெற்ற டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை போல ஆந்திராவில் சேவல் சண்டை பாரம்பரியமானது. அதனை கண்டிப்பாக நடத்தியே தீருவோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல ஆந்திராவில் பல்வேறு இடங்களில் ஆட்டுக்கிடா சண்டை போட்டிகள் மற்றும் காத்தாடி போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதற்கு எந்த தடையும் இல்லை. இதனால் சங்கராந்தி பண்டிகை ஆந்திராவில் களைகட்டி உள்ளது.