search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குகேஷ் பரிசுத் தொகைக்கு ரூ.4 கோடி வரியா? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம்
    X

    குகேஷ் பரிசுத் தொகைக்கு ரூ.4 கோடி வரியா? மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம்

    • குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார்.
    • குகேஷுக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

    சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். அதாவது இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.21 கோடி. போட்டியின் விதிமுறைப்படி 13 சுற்றுகளில் யார் முதலில் 6.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள். விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வெற்றிக்கும் அந்த வீரருக்கு சுமார் ரூ.1.68 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படும்.

    அந்த வகையில், குகேஷ் மொத்தம் மூன்று வெற்றிகளைப் பெற்று இருந்த நிலையில் அவருக்கு ரூ.5.04 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. டிங் லிரன் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், அவருக்கு ரூ. 3.36 கோடி கிடைத்தது. மீதமுள்ள பரிசுத் தொகை இருவருக்கும் இடையே சரி சமமாகப் பிரித்துத் தரப்பட்டது. இதன் மூலம் குகேஷ் இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மூலமாக ரூ. 11.34 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெற்று இருக்கிறார். இந்த முழு தொகை குகேஷுக்கு அப்படியே போகாது என்றும் வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்துகிறார் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    குகேஷ் பரிசுத் தொகையான ரூ.11.34 கோடியில் ரூ.4 கோடியை வரியாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கியது போல், வரிச்சலுகை வழங்கினால் இளம் வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும். மேலும் பாராளுமன்றத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சுதா வலியுறத்தி உள்ளார்.

    முன்னதாக, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் குகேஷுக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×