என் மலர்
இந்தியா

தொகுதி மறு சீரமைப்பு விவகாரம்: காங்கிரஸ் சார்பில் ஆய்வு செய்ய குழு- கே.சி.வேணுகோபால் தகவல்
- வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
- தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2026) இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் 8 எம்.பி. இடங்கள் வரை குறையும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் 24 கட்சிகள், அமைப்புகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் இது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்ய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இது தொடர்பான கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வெளியாகும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கங்களை தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மக்கள் தொகை பற்றிய புதிய கணக்கெடுப்பு நடத்தும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.